மகிழ்ச்சியின் நிழல்!

“பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கல மாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்” (ஏசா. 4:6).

வெயிலின் கொடூரமான காட்சியைக் குறித்து, சங்கை இலக்கியத்திலே ஒரு சம்பவம் உண்டு. நீண்ட நாட்கள் மழையில்லாமல், கோடை வெயில் உக்கிரமாய் பூமியை தாக்கினபோது, எல்லா குளங்களும் வற்றி, காய்ந்து வெடித்துப் போயிருந்தன. பூமியானது உஷ்ணத்தை கக்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது தன் வயிற்றினால் ஊர்ந்து வந்த, ஒரு நாகப்பாம்பு வெப்பம் தாங்க முடியாமல், தன்னுடைய வாலின் மேல் நின்று, முழு சரீரத்தையும், ஆகாயத்திலே தூக்கி வைத்துக் கொண்டிருந்தது.

அங்கே நிழல்தேடி வந்த தவளை, அந்த நிழல் பாம்பின் நிழல் என்று அறியாமல், அங்கே சற்றே இளைப்பாற வந்தது. அவ்வளவு நேரம் பசியாலும், உஷ்ணத்தாலும் வேதனைப்பட்டிருந்த பாம்பு, ஐஸ் கிரீம் கண்டதுபோல தவளையை அப்படியே விழுங்கியது. இன்றைக்கு அநேகர் இப்படித்தான் பாவ சந்தோஷங்களை நிழல்போல எண்ணி, அடைக்கலம் தேடுகிறார்கள். “ஐயோ, என் வாழ்க்கையிலே வறட்சி, கடன் பிரச்சனை தாங்க முடியவில்லை” என்று குடியாகிய, பாவ நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள். கொஞ்சம் நேரமாவது சந்தோஷமாயிருந்துவிட்டு வரலாம், என்று வேசிகளை நோக்கி ஓடுகிறார்கள்.

முடிவிலே, நிலைமை இன்னும் மோசமாகி, எயிட்ஸ் நோயை பெற்றுக்கொண்டு வருகிறார்கள். கடல் உப்புத் தண்ணீர், தாகத்தைத் தீர்க்காததுபோல, இந்த பாவ நிழல்கள், ஒருபோதும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தருவதில்லை. ஆனால் கர்த்தர் தருகிற நிழல் எவ்வளவு அருமையானது! “பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிட மாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்” (ஏசா. 4:6).

“தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்து வார்” (சங். 27:5). இந்த நோக்கத்துக்காகவே, கர்த்தர் மோசேக்கு வனாந்தரத்தில், “ஆசரிப்புக் கூடாரம்” ஒன்று அமைக்கும்படி கட்டளையிட்டார். பாவம் செய்து தோய்ந்தவர்கள், சாபங்களால் தோய்ந்தவர்கள் அங்கே வந்து பாவ மன்னிப்புக்காக, பலிகளை செலுத்துவார்கள். அதோடு மனநிறைவடைவார்கள்.

அந்த கூடாரத்தின் நிழல் பாவங்களையும், சாபங்களையும், அக்கிரமங்களையும் இறக்கி வைக்கக்கூடிய மீட்பின் நிழலாக இருந்தது. பரிசுத்த தேவனை சந்திக்கும் பரிசுத்த ஸ்தலமாயிருந்தது. ஆராதனை செய்யக்கூடிய, மகிழ்ச்சியின் கூடாரமா யிருந்தது. “அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது” (கொலோ. 2:17).

பழைய ஏற்பாட்டிலுள்ள, ஆசரிப்புக் கூடாரத்தின் நிழல், புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்துவுக்கும், அவரது சபைக்கும் அடையாளமாயிருக்கிறது. “ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல” கர்த்தரை எதிர்பார்த்திருக்கிறேன் என்றார் யோபு பக்தன் (யோபு 7:2).

ஆம், பகலின் உஷ்ணத்தில், கடினமாக வேலை செய்த ஒரு கூலியாள், ஏதாவது ஒரு நிழல் கிடைக்காதா? என வாஞ்சிப்பது இயல்பே. உங்களுக்கு இளைப்பாறுதல் தேவை என்பதை அறிந்த இயேசு, “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அழைக்கிறார் (மத். 11:28).

நினைவிற்கு:- “தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பாறத்தூணியிலே மூடிவைத்தார்” (ஏசா. 49:2).