கிருபையின் நிழல்!

“தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங். 36:7).

நம்முடைய தேவன், கிருபையின் தேவன். கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார் (யோவா. 1:14). மட்டுமல்ல, கிருபையாய் நமக்காக, கல்வாரிக்குச் சென்று, சிலுவை மறைவின் நிழலிலே, நமக்கு அடைக்கலம் தந்தருளுகிறார்.

ஒரு பழங்காலத்து பாடல் உண்டு “சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான், சாய்ந்து இளைப்பாறிடுவேன்”. தன்னை, நமக்காக தியாகம் பண்ணி, தன் நேசத்தின் உச்சிதத்தை நிழலாக, தருகிறவர் இயேசு. ஒரு மரம் நிழல் தருகிறதென்றால், அது அத்தனை வெயிலையும், வெப்பத்தையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு, குளிர்ச்சியாக, நிழலை நமக்குத் தருகிறது. அதை எண்ணி, மணவாட்டி சொல்லுகிறாள், “காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக் குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது” (உன். 2:3).

கிறிஸ்துவின் நிழல் என்பது என்ன? அதுதான் அவருடைய பாதப்படியின் இனிய பிரசன்னமாகும். இயேசு பூமியிலிருந்த நாட்களில், அவருடைய பாதபடியிலுள்ள ஆசீர்வாதங்களை விரும்பி, அநேகர் அவருடைய பாதத்திலே விழுந்து அற்புதத்தைப் பெற்றுக்கொண்டார்கள். மரியாள் இயேசுவின் பாதப்படியில் அமர்ந்து, அவருடைய வாய்மொழியினால் ஈர்ப்புண்டவளாக, தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை பெற்றுக்கொண்டாள் (லூக். 10:41,42).

“அன்பரின் பாதத்தில்” என்று சகோதரன் டி.ஜி.எஸ் தினகரனும், “திருவடி உபதேசம்” என்று சாது சுந்தர் சிங்கும் மிக அருமையான புத்தகங்களை எழுதியிருக் கிறார்கள். உங்களுக்கு எத்தனையோ கடமைகள் இருந்தாலும், அவைகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, அவருடைய பொன் முகத்தையே நோக்கிப்பாருங்கள். “அவர் சமுகம் என் சந்தோஷமே. அது நிறைவான சந்தோஷமே, என் பாத்திரம் நிரம்பி, நிரம்பி வழியுதே” என்று பக்தன் பாடுகிறான்.

கிறிஸ்துவின் பாதப்படியாகிய நிழல், உங்களுக்கு பரிசுத்தத்தை ஊட்டும். “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா. 17:17). கிறிஸ்து உங்களை தமது வசனங்களினால் சுத்திகரிப்பார். லேகியோன் பிசாசு பிடித்திருந்த ஒருவன் சொஸ்தமாகி, வஸ்திரந் தரித்து, இயேசுவின் பாதப்படியில் உட்கார்ந்திருந்தான். இனி அந்த ஆறாயிரம் பிசாசுகளும், தீய சக்திகளும், அவனைத் தொடவே முடியாது. தன்னண்டை ஓடி வருகிற, எந்தப் பாவிக்கும் இயேசுகிறிஸ்து நிழல் கொடுத்து, ஆறுதல்படுத்தி, ஆசீர்வதிக்கிறவர் “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங். 91:1).

கோடையின் பயங்கரமான வெயிலில் நிழல் தேடி சில மான்கள் அலைந்து கொண்டிருந்தன. தன் பெண் மான், தவிப்பதைக் கண்டு, ஆண் மான், அப்படியே ஓரிடத்தில் நின்று கொண்டு, தன் நிழல் கீழே விழும் பகுதியில் தன் துணையை படுக்க வைத்தது. பகலின் வெயில் சாய்ந்துபோகும்மட்டும், அந்த பெண்மான் அந்த நிழலிலே படுத்து உறங்கியது. இந்த காட்சி, கர்த்தருடைய கல்வாரியின் நிழலை, கிருபையின் நிழலை நினைப்பூட்டுகிறது அல்லவா?

நினைவிற்கு:- “என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்” (உன். 2:17).