கன்மலையின் நிழல்!

“அவர் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்” (ஏசா. 32:2).

சிறுவர்களாயிருக்கும்போது, பெற்றோர் நமக்கு, ஆதரவாகவும், நிழலாகவும் இருக்கிறார்கள். வளரும்போது, நம்முடைய சகோதர, சகோதரிகள் நமக்கு உதவி செய்கிற, நிழலாக இருக்கிறார்கள். திருமணமாகும்போது, நம்முடைய வாழ்க்கைத் துணையாக வருகிறவர்கள், நிழலாகவும், சுவையாகவும் விளங்குகிறார்கள். அவர்களெல்லோரும், கர்த்தர் நமக்கு கொடுக்கிற ஆசீர்வாதங்கள்.

இன்னும் உற்றார், உறவினர், நம்மை பாதுகாக்கிறார்கள். ஆபத்து நேரத்திலும் உதவிச் செய்கிறார்கள். ஆனாலும், கர்த்தரோ மிக மேன்மையானவர். அவர் எப்படிப் பட்ட நிழலானவர்? “கொடூரமானவர்களின் சீறல், மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” (ஏசா. 25:4).

கன்மலையின் நிழல், எவ்வளவு பாதுகாப்பானது. ஆகவேதான் குழிமுசல்கள் தங்களுடைய வீட்டை கன்மலையிலே தோண்டுகின்றன. புறாக்கள் கன்மலையின் வெடிப்புகளிலே, தங்கி தாபரிக்கின்றன. கர்த்தர் உங்களுக்கு அருமையான கன்மலையின் நிழலாயிருக்கிறார். கன்மலையின் தண்ணீரினால், உங்கள் தாகத்தைத் தீர்க்கிறார். உங்களோடு வழிநடந்துவரும், ஞானக் கன்மலையாயிருக்கிறார். கன்மலையின் தேனால் உங்களை போஷிக்கிறார்.

கன்மலையின் நிழல், உங்களுக்கு பாதுகாவலாய் அமைந்திருக்கிறபடியால், நீங்கள் ஒருபோதும் கலங்க வேண்டியதில்லை. கன்மலையை சுற்றி எத்தனையோ ஜீவ ராசிகள் மிகுந்த பாதுகாப்பாய் வாழுகின்றன. “உயர்ந்த பர்வதங்கள் வரையாடு களுக்கும், கன்மலைகள், குழிமுசல்களுக்கும் அடைக்கலம்” (சங். 104:18).

நீங்கள் எந்த நிழலில் அடைக்கலம் புகுந்திருக்கிறீர்கள்? பணமா? செல்வமா? செல்வாக்குகளா? அல்லது கன்மலையாகிய கிறிஸ்துவா? “கிறிஸ்வே அந்த ஞானக் கன்மலை” (1 கொரி. 10:4). அவரே பெருங்காற்றுக்கு புகலிடம். கொடுமையானவர் களின் சீறலுக்கு மறைவிடம். நீங்கள் ஒவ்வொருவரும், இளைப்பாறும் இடம். கன்மலை யின் நிழலிலே தங்குகிற புறாவாய் கிறிஸ்துவுக்குள் மறைந்து கொள்வீர்களாக.

ஒரு முறை, ஒரு சுவிசேஷகர் மலைப்பகுதியில் ஊழியம் செய்துவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தார். அது ஒரு காட்டுப் பாதை. திடீரென்று ஒரு பெரிய, பயங்கரமான கரடி, அவரை கண்டு துரத்த ஆரம்பித்தது. அவர் தன் உயிரைப் பிடித்து கொண்டு மிக வேகமாக ஓடினார். கரடியும் விடாமல் அவரை துரத்திக்கொண்டே வந்தது. இனி தப்ப முடியாது என்று உணர்ந்த சுவிசேஷகரின் கண்களில் ஒரு பாறையின் பிளவு தென்பட்டது. உடனே அவர், அதில் தன் சரீரத்தை அதற்குள்ளே புகுத்தி மறைந்து கொண்டார். கரடியால் உள்ளே புக முடியவில்லை. அந்த பாறையில் மோதி, மோதிப் பார்த்துவிட்டு, உறுமிக் கொண்டே ஓடிவிட்டது.

அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாறையிலிருந்த அந்த பிளவு கிறிஸ்துவின் காயங்களே என்பதை அறிந்து, “பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே” என்ற பாட்டை இயற்றினார். தேவபிள்ளைகளே, தீய எண்ணங்கள் உங்களை துரத்தும்போது, விட முடியாத கெட்ட பழக்கங்களும், அசுத்த எண்ணங்களும் ஆபாச நினைவுகளும், விரட்டும்போது, கன்மலையின் நிழலிலே வந்துடையுங்கள்.

நினைவிற்கு:- “பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும் மறைவிடமாகவும் ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்” (ஏசா. 4:6).