நிழலானவர் இயேசு!

“கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக் கிறார்” (சங். 121:5).

உங்களுடைய வலது கையையும், வலது பகுதியையும் பாருங்கள். அங்கே கர்த்தர் நின்றுகொண்டிருக்கிறார். உங்களுக்கு ஆதரவாகவும், இனிமையான நிழலாகவுமிருக்கிறார். பொதுவாகவே உங்களுடைய இடது கரத்தைவிட, வலது கரம், அதிக பெலன் வாய்ந்தது. எதை செய்ய விரும்பினாலும், வலதுகரத்தால் முழு பெலத்தோடு செய்கிறோம். அதுபோலவே கர்த்தருடைய வலதுகரம், பராக்கிரமஞ் செய்யும் (சங். 118:16). அவரது வலதுகரம், ஆபத்திலிருந்து விடுவிக்கும் (சங். 107:28). “அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவரது வலதுகை என்னை அரவணைக்கும். ஆற்றித் தேற்றும் (உன். 8:3). கர்த்தருடைய வலதுகரம், தம் பிள்ளைகளைத் தாங்கும் (சங். 18:35).

ஆகவே தாவீது சொன்னார், “கர்த்தர் என் வலதுபாரிசத்திலிருக்கிறபடியால், நான் அசைக்கப்படுவதில்லை” (சங். 16:8). மரித்து உயிரோடு எழுந்த, இயேசு தமது சீஷர்களிடம், “உங்கள் வலதுபக்கத்திலே உங்கள் வலையை போடுங்கள்” என்றார். அப்படிப் போட்டு, வலதுபக்கத்திலே திரளான மீன்களைப் பிடித்தார்கள்.

ஒரு பெரும் செல்வந்தனை, மரண பயம் வாட்டியது. அவர் கர்த்தரை விசுவாசியாத தினாலே, என் வலது பக்கத்திலே கர்த்தர் இருக்கிறார் என்று தைரியமாய் சொல்ல முடியவில்லை. தன்னுடைய இருப்பிடத்தில் திடீரென்று அணுக்குண்டுகள் பொழிந்தால், என்ன செய்வது? என்று கலங்கினார். எனவே அணு வீச்சிலிருந்து தன்னையும், தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள, பூமிக்கு அடியில், ஒரு பெரிய அணுக்குண்டு மறைவிடம் ஒன்றைக் கட்ட தீர்மானித்தார். பெரிய விஞ்ஞானிகள், கட்டிட நிபுணர்கள், இஞ்சினியர்கள் இடைவிடாதபடி உழைத்து, பல கோடி டாலர் செலவில், ஒரு உறுதியான பங்களாவை கட்டி முடித்தார்கள்.

அந்த பங்களாவை பிரதிஷ்டை செய்யும்படி, வந்த தேவ ஊழியரான மாரிஸ் செரில்லோ, “நான் இதைவிட குறைந்த செலவில், அதிக உறுதியான வேறொரு மறைவிடம் அமைத்திருக்கிறேன்” என்றார். கோடீவரனுக்கு ஆச்சரியமாயிருந்தது. எங்கேயிருக்கிறது அந்த மறைவிடம்? என்று கேட்டார். போதகர், அவருக்கு சங். 91:4-ஐ சுட்டிக்காட்டினார். “அவர் தமது சிறகுகளாலே, உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்” (சங். 91:4). அந்த ஊழியர் சாட்சியாக, “எப்படி தான், உன்னதமானவருடைய நிழலில் அடைக்கலம் புகுந்தார் என்றும், அவருடைய செட்டைகளே தனது நிழல் என்றும், போதகர் விளக்கியபோது, வாயடைத்து போனார், அந்த கோடீஸ்வரன்.

வலதுபக்கத்திலே, கர்த்தர் நிற்கிறதினாலே, நிழலை காண முடிகிறது. நிழல் இருக்கிறதினாலே, நிழலுக்குரிய நிஜமானவரும், உங்களுடைய பட்சத்திலே நிற்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். கர்த்தர், உங்களோடிருக்கிறார்.

கர்த்தர் உங்கள் வலதுபாரிசத்தில் நிற்பாரென்றால், நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம், வீணாகக் கலங்கவேண்டாம். நீங்கள் கர்த்தருடைய சமுகத்திலே உங்கள் பாரங்களை இறக்கி வைத்துவிட்டு, ஆறுதலும், தேறுதலும் அடையலாம். எந்த சத்துருவைக் கண்டும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிற தேவன்.

நினைவிற்கு:- “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” (சங். 63:7).