வறட்சியான காலத்திலும் நடத்துவார்!

“மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்பு களை நிணமுள்ளதாக்குவார்” (ஏசா. 58:11).

பகல் வந்தால், இரவு வரும். குளிர்காலம் வந்தால், கோடைக்காலம் வரும், சந்தோஷமான நாட்களும் வரும், துக்கமான நாட்களும் வரும். பாடுகள், வேதனைகள், உபத்திரவமில்லாத, கிறிஸ்தவ மார்க்கத்தை கர்த்தர் நமக்கு அறிமுகப் படுத்தவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33) என்கிறார்.

“வறட்சியான காலங்கள் வந்துவிட்டதே” என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. கர்த்தர் வாக்குப்பண்ணி, “மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” என்று சொல்லுகிறார். கர்த்தர் நீதிமான்களை, பசியினால் வருந்தவிடார். “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து, பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங். 34:10). “பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண், அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (சங். 33:19). “அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்” (சங். 37:19).

பஞ்சத்தினால் வருகிற வறட்சி, ஆகாரக் குறைவினால் வரும் சோர்வு, ஒரு பக்கம் இருந்தாலும், கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்ச நாட்களும் வரும் (ஆமோஸ் 8:11). அப்படிப்பட்ட காலங்கள் பிரதான ஆசாரியனாகிய ஏலியின் காலத்தில் இருந்தது. அப்பொழுது தேவனுடைய வார்த்தையோ, தேவனுடைய வழிநடத்து தலோ, தீர்க்கதரிசன வரங்களோ, யாருக்கும் கிடைக்க வில்லை (1 சாமு. 3:1).

இன்றைக்கும் பல கம்யூனிச தேசங்களிலும், இஸ்லாமிய தேசங்களிலும் வேத வசனங்கள் கிடைக்கக்கூடாதபடிக்கு, தடை சட்டங்களும், அரசாங்க எதிர்ப்பு களும் இருக்கின்றன. நமது தேசத்திலே ஒரு சில இடங்களில் சுவிசேஷம் அறிவிப் பதற்கும், ஞானஸ்நானம் கொடுப்பதற்கும், விரோதமான தடை சட்டங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், எவ்வளவு இருண்ட மகா வறட்சியான, காலங்கள் வந்தாலும், கர்த்தரோ, ஆவியானவர் மூலம், நம் ஆத்துமாவை திருப்தியாக்கி, நம் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்.

ஒரு லுத்தரன் சபையின் பொருளாளர், சீனா தேசத்துக்குப் போனார். கிறிஸ்துவை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கிற ஒரு ஜெபக்குழுவினர், அவரை வரவேற்று சபையை நடத்துகிற ஒரு ஏழைத் தாயாரிடம், அவரை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் இந்த பொருளாளரின் கைகளை குலுக்கி, வரவேற்றார்கள். அப்பொழுது அவர்மேல் மின்சாரம்போன்ற தேவ வல்லமை, அளவில்லாமல் இறங்கியது. பொருளாளர் தூக்கியெறியப்பட்டார். பரிசுத்த ஆவியினால் நிரம்பினார்.

அவருக்கு நினைவு வந்ததும், “அம்மா, இவ்வளவு பெரிய அபிஷேகத்தை, வல்லமையை, எப்படி பெற்றுக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, “ஐயா, கிறிஸ்துவின்மேல் வைத்த அன்பினிமித்தம், நான் பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டபோது, வேதாகமத்தை என்னுடன் எடுத்துச் சென்றேன். வேதமே எனக்கு ஆறுதலாகவும், ஜெபிக்கவும், என் ஆத்தும நேசரோடு உறவாடவும் இனிய அனுபவமாய் விளங்கினது. அப்பொழுது கர்த்தர் என்னை பரிசுத்த ஆவியின் அக்கினியால், அபிஷேகம் பண்ணினார் என்றார்கள்.

நினைவிற்கு:- “கர்த்தராகிய நான் உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்குவேன்” (ஏசா. 41:17,18).