நித்தமும் நடத்துவார்!

“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” (ஏசா. 58:11).

தேவபிள்ளைகளே, “நான் உன்னை நித்தமும் நடத்துவேன். நானே உன்னை நடத்தும்படி, உன் வலது கரத்தைப் பிடித்திருக்கிறேன்” என்று கர்த்தர் வாக்களிக் கிறார். அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது (2 கொரி. 1:20). “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” (அப். 2:39).

இருபது லட்சம் இஸ்ரவேலரை, தேவனாகிய கர்த்தர் ஒரு தகப்னைப்போல, பாசத்தோடு, மனதுருக்கத்தோடு நடத்திக்கொண்டு வந்தார். அவர்கள் பகலின் உஷ்ணத்தினால், வாடிவிடக்கூடாதே என்பதற்காக, மேக ஸ்தம்பங்களை கட்டளை யிட்டார். இரவில் வழிநடத்த அக்கினி ஸ்தம்பங்களை வைத்தார். ஒவ்வொருநாளும் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்தருளினார். இஸ்ரவேலர் இறைச்சியை விரும்பியபோது, காடைகளைக் கொண்டு வந்து, அவர்களுடைய பாளயத்திலே விழும்படிச் செய்தார்.

அந்த கர்த்தர், உங்களை நித்தமும் நடத்துவார். எலியாவை அவர் எத்தனை அருமையாய் நடத்தினார், போஷித்தார்! காகங்கள் அவருக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தன. தாகத்துக்கு எலியா கேரீத் ஆற்றின் தண்ணீரைக் குடித்தார் (1 இராஜா. 17:6). எலியாவின் தேவன், உங்களின் தேவன். நித்தமும் உங்களை நடத்துவார்.

“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர் களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங். 34:10). சாறிபாத் விதவையையும், அவள் மகனையும், பஞ்சகாலத்திலே கர்த்தர் அற்புதமாய் போஷிக்கவில்லையா? குழப்பங்களும், வேதனைகளும் நிறைந்திருந்த உலகத்திலே, அமர்ந்த தண்ணீர் களண்டைக்கு நடத்தும், மேய்ப்பன் உங்களுக்கு உண்டு (சங். 23:2). சமாதானமற்று தவிக்கும் இந்த பூமியிலே, உங்கள் கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், சமாதான கர்த்தர் உங்களுக்கு உண்டு (லூக் 1:79).

வேதனை உண்டாக்கும் வழியை நீக்கிவிட்டு, தேவ சித்தத்தின் பாதையிலே நித்திய வழிகளிலே உங்களை நடத்தும், நித்திய பிதா உங்களுக்கு உண்டு (சங். 139:24). சகல சத்தியத்துக்குள்ளளும் வழிநடத்தும் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் உங்களுக்கு உண்டு (யோவா. 16:13). யோசேப்பை ஆட்டு மந்தையைப்போல நடத்துகிறவர், வழிநடத்தி, பரம கானான் வரைக்கும் கொண்டுச் செல்ல வல்லமை யுள்ளவராயிருக்கிறார் (சங். 80:1).

“நான் நடத்துவேன்” என்று கர்த்தர் சொன்னது மட்டுமல்ல, நித்தமும் நடத்துவேன் என்று வாக்களித்திருக்கிறார். அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு கர்த்தர் பகலில் அவர்களை மேக ஸ்தம்பத்திலும், இரவு அவர்களுக்கு வெளிச்சங் காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும், அவர்களுக்கு முன்சென்றார் (யாத். 13:21).

“கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப் பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்.கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்” (உபா. 32:12-14).

நினைவிற்கு:- “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்” (மத். 28:20).