திறக்கப்பட்ட ஜீவ ஊற்று!

“அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலே மின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்” (சகரி. 13:1).

“திறக்கப்பட்ட ஒரு ஊற்று,” அது இம்மானுவேலாகிய கிறிஸ்துவினுடைய சரீரத்திலிருந்து புறப்பட்டு வரும், இரத்த ஊற்று. நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்ட அவருடைய சரீரம் முழுவதிலுமிருந்து புறப்பட்டு வரும், செந்நிறமான ஊற்று, நம் சாபங்களை யும், மீறுதல்களையும், அக்கிரமங்களையும் மன்னிக்கும் கிருபையின் ஊற்று.

“என் கைகளையும், என் கால்களையும் உருவக் குத்தினார்கள்” (சங். 22:16). அந்த கைகளை தோமாவுக்கு நேராக நீட்டி, “நீ உன் விரல்களை என் காயத்திலே போட்டுப் பார்” என்று சொன்னார். ஏன் அப்படி சொன்னார்? இனி தோமா அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிருக்க வேண்டும், என்பதற்காக (யோவா. 20:27). இன்றைக்கு அநேகம் பேர் ராசிபலன்கள் மேலும், மந்திரவாதிகள்மேலும், ஜோசியத்தின்மேலும் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். தங்களுடைய கைகளைக் காட்டி, என் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்று விசாரிக்கிறார்கள். ஆனால் எந்த கரங்களில் பாவக்கறைகள் படிந்திருக்கிறதோ, அவர்களுக்கு நல்லகாலம் பிறப்பதில்லை.

அதே நேரத்தில், யார் யாருடைய கரங்கள், இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறதோ, சுத்திகரிக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள். “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1). “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருக்கிறவனே, கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்” (சங். 24:4).

தேவனுடைய பிள்ளைகளே, உங்களுடைய பாவங்களை கழுவுவதற்காகவே உங்களை தெரிந்துகொண்டு, தன்னுடைய கரங்களில் ஏந்தியிருக்கிறார். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள், எப்போதும் என்முன் இருக்கிறது” (ஏசா. 49:15,16) என்று மனதுருக்கதோடே சொல்லுகிறார்.

பழைய பாடல் ஒன்று உண்டு. “இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே, எப்பாவத் தீங்கும் அதனால் நிவிர்த்தியாகுமே. நான் நம்புவேன், நான் நம்புவேன், இயேசு எனக்காய் மரித்தார்.” தேவபிள்ளைகளே, “இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்” (2 கொரி. 6:2).

கிருபையின் காலம் முடிவடையும்போது, அந்திக்கிறிஸ்துவினுடைய காலம் ஆரம்பமாகிவிடும். அதன்பின் நீங்கள் இரட்சிப்படைய முடியாது. பரிசுத்த ஆவியானவரும், தேவபிள்ளைகளோடு எடுத்துக்கொள்ளப்படுவார். இரட்சிப்பு சமீபமாயிருக்கிற இந்த நாட்களிலே சிலுவைக்கு முன்பாக வந்துநின்று, நருங்குண்ட, நொறுங்குண்ட இருதயத்தோடு, “அப்பா, என் எல்லாப் பாவங்களையும் மன்னித்து, இன்று எனக்கு இரட்சிப்பைத் தாரும்” என்று கேளுங்கள். நீங்கள் உண்மையாய் மனதுருக்கத்தோடு கேட்பீர்களானால், கர்த்தர் நிச்சயமாய் உங்களுக்கு மன்னிப்பார். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டடான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

நினைவிற்கு:- “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்மு டைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே” (சங். 15:1,2).