சோர்ந்து போகமாட்டோம்!

“ஆகையால், உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன். அவைகள் உங்களுக்கு மகிமையா யிருக்கிறதே” (எபேசி. 3:13).

ஆரம்பத்தில், ஒரு தேவதாரு மரத்தின் விதையிலிருந்து, சிறிய செடி பலவீனமாய் எழுந்து வரக்கூடும். அதை சுற்றியுள்ள மற்ற செடிகள்,கொடிகள் அதை நெருக்கும். மழையும், பனியும், வெயிலும், புயலும், அதைச் சோர்ந்துபோகப் பண்ணும். ஆனால் அது சோர்வடையாமல், தொடர்ந்து முயற்சித்து, உயரமாக வளரும். ஆயிரக்கணக்கான பறவைகள் தேவதாரு மரத்திலே கூடுகட்டி, குடும்பமாக மகிழ்ந்து களிகூரும். வீடுகளிலே மச்சுப்பாவுவதற்கு, அந்த மரத்தை தெரிந்தெடுக்கிறார்கள். நீங்கள் கர்த்தருக்கென்று நாட்டப்பட்ட, தேவதாரு மரங்களாயிருக்கிறீர்கள்.

கர்த்தர் சிலரை எடுத்து பயன்படுத்தும்படி, பொறுப்புகளை கொடுக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். “ஐயோ, எனக்கு தோல்வியைப் பற்றி பயமாயிருக்கிறது. என்னால் செய்ய முடியாது. எனக்குப் போதுமான பயிற்சி இல்லை” என்கிறார்கள். வேறு சிலர், தங்களுடைய தகுதியில்லாமையை உணர்ந்து, “நான் கொன்னை வாய் உள்ளவன், நாவும் மந்த நாவு. வேறு யாராவது, முன்நின்று செய்யட்டும். கடந்த கால தோல்விகளும், கசப்பு நினைவுகளும், என் உள்ளத்தைத் வாட்டுகிறது” என்று சாக்குப் போக்கு சொல்லுகிறார்கள்.

அப்படித்தான் எரேமியா தீர்க்கதரிசியும், சொன்னார். “ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன். சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றார்” (எரே. 1:6). ஆனால் கர்த்தர் சொன்ன வார்த்தை என்ன? “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே. நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ யோய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம், நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன்னைக் காக்கும்படிக்கு, நான் உன்னுடனே இருக்கிறேன் என்று சொன்னார்” (எரே. 1:7,8).

விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பை மட்டுமல்ல, இன்னும் நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்தார். மின்சார பல்பிலே, பிரகாசமாய் எரியக்கூடிய இழையை, எந்த உலோகத்தினால் செய்யலாம்? என்று, ஆயிரக்கணக்கான முறை முயற்சித்தும், தோல்விக்கு ஒப்புக்கொடாமல், முடிவில் “டங்ஸ்டன்” என்ற இழையை அவர் பயன்படுத்தி, வெற்றிக் கண்டார். அவர் சொன்னார், “அநேகர் முடிவடைகிற தருவாயில் முயற்சியை விட்டுவிடுகிறார்கள். சோர்வடையாமல் முயற்சித்துக்கொண்டிருக்கிறவனுக்கு, நிச்சயமாய் வெற்றி கிடைக்கும்” என்றார்.

ஆப்பிரிக்காவில் வைர சுரங்கத்தைத் தோண்டும்படி, அரசாங்கம் ஒரு காண்டிராக்டருக்கு ஒப்புவித்தது. அவர் கடினமான பாறைகளையெல்லாம் துளையிட்டு, ஏறக்குறைய 1700 அடி கீழே போய்விட்டார். பிறகு, முயற்சியை கைவிட்டு விட்டு, நம்பிக்கையில்லாமல் நின்றுபோனார். பின்பு அரசாங்கம், இன்னொரு காண்டிராக்டருக்குக் கொடுத்தார். அவர் மிகுந்த ஜெபம்பண்ணி, புதிய இடத்தில் தோண்டாமல், அதே இடத்திலே திரும்பவும் முயற்சித்து, இன்னும் நூறு அடி தோண்டுவதற்குள்ளாக அநேக வைர கற்களைக் கண்டார். மனம் மகிழ்ச்சியோடு கர்த்தரைத் துதித்தார். ஆகவே, உங்களுடைய நல்ல முயற்சியை கைவிட்டுவிடாமல், பரிசுத்தத்தை நோக்கியும், பரலோகத்தை நோக்கியும் தொடர்ந்து ஓடுங்கள்.

நினைவிற்கு:- “இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி. 22:12).