நிலை நிறுத்துவார்!

“தேவன் தாமே, கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப் படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1 பேது. 5:10).

கர்த்தர் உங்களை நிலைநிறுத்துகிறபடியால், நிச்சயமாகவே முடிவுபரியந்தம் நீங்கள் நிலைநிற்பீர்கள். அதற்காக முயற்சி செய்யுங்கள். “கர்த்தர் என்னை அழைத்த அழைப்பிலே, நான் நிலைநிற்க வேண்டும். ஊழிய பாதையிலே, நான் நிலை நிற்க வேண்டும். கடைசி வரை, தளராது போராட வேண்டும். பாதியிலே விட்டுவிட மாட்டேன். சோர்ந்து போகமாட்டேன்” என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

கர்த்தரும் உங்களை எப்பொழுதும் நிலைநிறுத்த ஆவலுள்ளவராயிருக்கிறார். “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்துவேன்” (யாத். 9:16). தாவீது, ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை, தன்மேலே ஏற்றுக்கொண்டு, கர்த்தரிடத்தில், “நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்மு டைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்” (சங். 41:12) என்றார்.

இங்கிலாந்தை, ஆண்டு வந்த “ராபர்ட் புருஸ்” என்ற மன்னனை எதிரிகள், தோற்கடித்து சிங்காசனத்தை பறித்துக்கொண்டார்கள். ஆனாலும் அவர் தம்முடைய முயற்சியை கைவிடாமல், பதினெட்டு முறை, திரும்பத் திரும்ப அவர்களுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனார். படுதோல்வியையே கண்டார். எதிரி ராஜா, அவரை எப்படியாவது கொன்றுவிட வேண்டுமென்று, பின்தொடர்ந்து வந்தார். ஆகவே, ராபர்ட் புருஸ் ஒரு குகைக்குள் போய் ஒளிந்து கொண்டார்.

அங்கே ஒரு சிலந்திப் பூச்சி, குகையின் வாசலிலே கூடு கட்ட, ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு குதித்துப் பார்த்தாலும், தன்னுடைய நூல் இழையைக் கொண்டு போக முடியவில்லை. ஆயினும், சோர்ந்து விடாமல் பல தடவை முயன்று, கடைசியில் அந்தக் குகையின் வெளிப்புறத்தில் கூடு கட்டி, அதன் மையத்தில் கெம்பீரமாய் சிங்காசனத்தில் அமர்ந்ததுபோல, அமர்ந்து கொண்டது.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த, இந்த ராஜாவுக்கு நம்பிக்கை வந்தது. தைரியம் வந்தது. கர்த்தர் என்னை, சிங்காசனத்தில் மறுபடியும் அமரச் செய்து நிலைப்படுத்துவார், என்ற விசுவாசம் வந்தது. அப்பொழுது இந்த ராஜாவை துரத்திக்கொண்டு வந்தவர்கள், அந்த குகையைப் பார்த்தார்கள். ஒருவன் சொன்னான், “இந்த குகையின் வாசலில் எவ்வளவு பெரிய சிலந்தி கூடு கட்டியிருக்கிறது! எப்படி ஒருவர் உள்ளே போயிருக்க முடியும்? வேறு இடத்தில் தேடுவோம்” என்று புறப்பட்டு போய்விட்டார்கள். அடுத்த முறை, அவர் தன் வீரர்களை உற்சாகப் படுத்தி, முடிவில் யுத்தத்திலே ஜெயித்தார். அரியணையில் அமர்ந்தார்.

“நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை, முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப் போம்” (எபி. 3:14). “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக். 1:12).

எரிகோ மதிலை முதல் தடவை சுற்றி வந்தபோது, அது விழவில்லை. ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம், முதல் முதல் ஆறு நாட்களில், ஆறு முறையும், ஏழாவது நாளில் ஏழு முறையுமாக மொத்தம், 13 தடவை சோர்வடையாமல் சுற்றி வந்தபோது, எரிகோ மதில் விழுந்தது (யோசு. 6:3-5).

நினைவிற்கு:- “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2,3).