பெரிய தடைகளா?

“தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்” (மீகா. 2:13).

பெரிய பிரச்சனைகள், பெரிய தடைகள், பெரிய போராட்டங்களைப் பார்த்து, அநேகர் சோர்ந்து, முயற்சியை விட்டு விடுகிறார்கள். அவைகளெல்லாம் உலகத்தாரின் பார்வைக்கு பெரிதானவைகளாய் தோன்றலாம். ஆனால், கர்த்தருடைய வல்லமையை விட, அவை பெரிதானதல்ல. ஆகவே தடைகளைப் பார்க்காமல், தடைகளை தகர்த்து, பாதையை உண்டாக்கும், கர்த்தரை நோக்கிப் பாருங்கள்.

“தடைக் கற்களை, படிக் கற்களாக்குங்கள்” என்ற ஒரு வாசகத்தை எங்கோ, வாசித்திருக்கிறேன். எது மற்றவர்களுடைய முன்னேற்றத்தை தடுக்கிறதோ, அதை நீங்கள் உயர்ந்து செல்லுவதற்கான படிக் கற்களாய் கர்த்தர் மாற்றியருளுவார். அமெரிக்காவில் ‘ரைட்’ சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும்போது, எத்தனையோ தடைகள் வந்தன. முதல் விமானம் சில அடி தூரம்கூட பறக்கவில்லை. கீழே விழுந்து நொறுங்கினது. என்றாலும், அவர்கள் சோர்ந்து போய்விட வில்லை.

திரும்பவும் குறைகளை நிவிர்த்தியாக்கி, மீண்டும் பறக்கவிட்டார்கள். அதை 25 போர்வீரர்கள் கயிறு கட்டி, நிறுத்த வேண்டிய நேரத்திலே நிறுத்தும்படி, காத்திருந்தார்கள். ஆனால் அந்த விமானம் திடீரென்று புறப்பட்டதினால், அந்த வீரர்களும், விமானத்தோடு உயர செல்ல வேண்டியதிருந்தது. மிக உயரமாய் போகிறதே என்று அந்த வீரர்களெல்லாம் பயந்து நடுங்கி, ஒவ்வொருவராக கயிறை விட்டுவிட்டு, கீழே விழுந்து மரித்தார்கள். ஆனால் ஒரு வீரன் மட்டும், தன் முயற்சியை கைவிடாமல், “ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்” என்று கதறினான்.

பிறகு, கர்த்தர் கொடுத்த ஞானத்தின்படியே, தான் தொங்கிக்கொண்டிருந்த அதே கயிற்றை, தன்னைச் சுற்றி கொண்டுவந்து, ஒரு முடிச்சு போட்டு அதிலே உட்கார்ந்துகொண்டான். விமானம் கீழே இறங்கியபோது, பத்திரமாக கீழே வந்து சேர்ந்தான். ஆம், எந்த முயற்சியை எடுத்தாலும், நிச்சயமாகவே அதிலே தடைகளும், அதிலே இடையூறுகளும் வரத்தான் செய்யும். உங்கள் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமலிருக்கலாம். அதிகாரிகள் வந்து தேவையில்லாத கேள்வியைக் கேட்டு, மனமடிவடைய செய்யக்கூடும். ஆனாலும் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில், நீங்கள் அறுவடை செய்வீர்கள்.

இரண்டாம் உலக மகா யுத்தத்திலே, ஜப்பான் படுதோல்வியடைந்து, பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துபோனது. ஜப்பான் மேல், அமெரிக்காக அணுக் குண்டுகளை பொழிந்தது. ஹீரோசிமா, நாகசாகி என்ற பட்டணங்கள் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. எல்லா பக்கமும் அவமானம், தலைக்குனிவு. எனினும் ஜப்பானியர் சோர்ந்துவிடவில்லை. தங்கள் முயற்சியை கைவிட்டு விடவில்லை. இன்று எல்லாத் துறைகளிலும், முன்னேறி, உலக நாடுகளை விட முன்னணியில் நிற்கிறார்கள்.

போதகர். பால் யாங்கி சோ, ஒரு கிராமத்தில், நான்குபேரோடு தன்னுடைய சபையை ஆரம்பித்தபோது, அதில் ஆயிரம் அங்கத்தினர்கள் இருக்க வேண்டுமென்று ஜெபித்தார். ஊழியம் செய்தார். வீடுகளை சந்தித்தார். ஆனால் அவருக்கோ, பல கொலை முயற்சிகள். அங்குள்ள பூசாரிகள் அவரை ஊரைவிட்டு துரத்தும் படி, சதி செய்தார்கள். ஆனால் அவர் மனம்தளரவில்லை. இன்று அவருடைய சபையில் பதினான்கு இலட்சம்பேர் இருக்கிறார்கள். “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.”

நினைவிற்கு:- “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது. ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:6).