முயன்றால் முடியும்!

“நான் செய்த முயற்சிகளிலெல்லாம், என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது. இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும், எனக்கு வந்த பலன்” (பிர. 2:10).

உங்கள் முயற்சிகளினால், உங்களுக்கு நல்ல பலன் உண்டு. நீங்கள் முழு பெலத்தோடு முயற்சி செய்யும்போது, கர்த்தர் நிச்சயமாக, அதை வாய்க்க செய்வார். நீங்கள் செய்த முயற்சியிலே, மகிழ்ச்சி கொண்டிருங்கள். வெற்றியுள்ள ஜெப வாழ்க்கைக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விசுவாசிக்கும்போது, பெற்றுக்கொண்டேன் என்று நம்பிக்கையோடு தொடருங்கள்.

“ராக்பெல்லர்” என்பவர்தான். தொழிலிலே புரட்சி கண்டவர். பெரும் செல்வந்தர்களிலே அவரும் ஒருவர். அவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அருகிலிருந்த வாலிபன், அவரிடம் கேட்டான். “உங்களுக்கு இருக்கிற பணம், பத்து தலைமுறைக்கு போதுமே. இப்படியிருக்க, ஏன் திரும்பவும் கஷ்டப்பட்டு, உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் இப்படி இயந்திர கருவியாக, இடைவிடாது செயல்படுகிறீர்கள்? என்றான்.

அதற்கு ராக்பெல்லர், “வாலிபனே, இந்த விமானம், வானில் மிக உயரத்திற்கு வந்துவிட்டது. இதை எண்ணி, இந்த விமானி இயந்திரத்தை நிறுத்திவிட்டால், என்னவாகும்? அதேபோல, என் வளர்ச்சியில் நிறைவடைந்து, என் முயற்சியை நிறுத்திவிட்டால், நான் அவமானமாகிவிடுவேன். என் சோர்வைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அதனால்தான், தொடர்ந்து உற்சாகமாக முன்னேறிக் கொண்டிருக் கிறேன்” என்று சொன்னார்.

கிறிஸ்துவ வாழ்க்கையிலே, நமக்கு திருப்தி ஏற்படக்கூடாது. இன்னும் முயற்சி செய்ய வேண்டும். இன்னும் வளர வேண்டும். பூரணப்பட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நீங்கள் அடைந்துவிட்ட பரிசுத்தத்தைக் குறித்து, திருப்திபட்டு நிறுத்திவிடாதிருங்கள். “நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி. 22:11). தேவபிள்ளைகளே, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு. ஆனால் பரிசுத்தத்துக்கோ, நீதிக்கோ, எல்லையேயில்லை.

அப். பவுல், தன்னுடைய முயற்சியிலே, திருப்தியடைந்து, முன்னேற்றத்தை நிறுத்தி விடவில்லை. “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால், நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ, அதை நான் பிடித்துக் கொள்ளும்படி, ஆசையாய்த் தொடருகிறேன். பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:12-14). இளம் ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவை அவர் உற்சாகப்படுத்தும்போது, “தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவ பக்தியானது இந்த ஜீவனுக்கும், இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்த முள்ளதாகையால் எல்லாவற்றிலும், பிரயோஜனமுள்ளது” (1 தீமோத். 4:7,8).

பாலகருக்கு பாலைக் குடிக்க கொடுத்த பெற்றோர், போகப் போக சத்துள்ள உணவு வகைகளைக் கொடுக்கிறார்கள். சரீர வளர்ச்சியெல்லாம் 25 ஆண்டுகளுக்குள் முடிந்துவிடுகிறது. ஆனால் ஆவிக்குரிய வளர்ச்சியோ, உங்களுடைய வாழ்க்கையின் முடிவு வரும்வரை, இருந்து கொண்டேயிருக்கிறது.

நினைவிற்கு:- “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால், பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானோந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்” (எபி. 5:14).