விட்டு விடாதிருங்கள்!

“ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்” (எபி. 10:35).

“ஊழியத்தை விட்டுவிடுவேனோ? என்கிற மனச்சோர்பு, மிகப் பெரிய தீர்க்கதரிசியாகிய, எலியாவுக்கும் வந்தது. அவர், “இஸ்ரவேலின் அக்கினி இரதம்” என்று அழைக்கப்பட்டார். அவர் பேசிய வார்த்தைகள், அக்கினி வார்த்தைகள். “என் வாக்கின்படியே அன்றி, இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான், அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றார்” (1 இராஜா. 17:1).

அப்படிப்பட்ட தீர்க்கதரிசிக்கும்கூட, மனச்சோர்பு வந்தது. மனச்சோர்வு, சாத்தானின் வல்லமையான ஆயுதம். அது சிறிய ஊழியக்காரர்களுக்கு மட்டுமல்ல, பயிற்சி பெற்று அனுபவமுள்ள, அக்கினி மயமான, ஊழியரையும் தாக்கத்தான் செய்கிறது. வாழ்க்கையில் மனச்சோர்பு சந்திக்காத விசுவாசியையும், ஊழியரையும் காணவே முடியாது.

வேடிக்கையான ஒரு கதை உண்டு. ஒரு முறை, மிகாவேல் தூதன், சாத்தானுடைய ஆயுதங்களையெல்லாம், பறித்துக்கொள்ள இறங்கி வந்தாராம். பயந்துபோன சாத்தான் சொன்னான், “என்னிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் தந்து விடுகிறேன். ஒரு ஆயுதமான மனச்சோர்பு மட்டும், என்னில் இருக்கட்டும். அது எனக்குப் போதும்” என்றானாம். ஆம், “மனச்சோர்பு” என்ற ஆயுதம் மூலம், எப்படிப் பட்டவர்களையும் வீழ்த்திவிடலாம் என்பது அவனுடைய நம்பிக்கை.

எலியா வானத்திலிருந்து அக்கினி இறங்கியதையும், பாகால் தீர்க்கதரிசி வெட்டப்பட்டு மரித்ததையும் யேசபேல் கேட்டபோது, ஒரு வேளை அவள் உள்ளூர பயந்தாலும்கூட, எலியாவை மிரட்டி, நான் “நாளை இந்நேரத்தில், உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள்” என்று சொல்லச் சொன்னாள். அதைக் கேட்டதும், எதிர்பாராத திகிலும், பயமும், எலியாவை பிடித்துக்கொண்டது. வேதம் எச்சரிக்கிறது, நாசியிலே சுவாசமுள்ளவனுக்குப் பயப்படாதே. “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” (நீதி. 29:25). “மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக. நியாயத்தீர்ப்பு தேவனுடையது” (உபா. 1:17).

உள்ளத்தில் தோல்வி மனப்பான்மையால் தவித்த எலியா, யேசபேலுக்கு பயந்து, தன் உயிரை காக்க பெயெர்செபாவுக்குப் புறப்பட்டு ஓடினார். அங்கே தன் வேலைக்காரனை நிறுத்திவிட்டார். ஒருவேளை அவன் யேசபேலுக்கு கைக்கூலியா யிருந்து, காட்டிக்கொடுத்துவிட்டால் என்ன செய்வது? தனியனாக, தோல்வி மனப்பான்மையோடு, வனாந்தரத்தில் தொடர்ந்து ஓடினார்.

ஆனால், அன்புள்ள ஆண்டவர் பாசத்தோடும், மனதுருக்கத்தோடும் எலியாவை நோக்கிப் பார்த்தார். அவருடைய களைப்பையும், பசியையும் மாற்ற, தேவதூதனை அனுப்பினார். அந்த தேவதூதன், அவரை தட்டியெழுப்பி, போஜனம் பண்ணும்படி அன்போடு கேட்டான். “கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி, அவர், எலியாவே இங்கே உனக்கு என்ன காரியம்” (1 இராஜா 19:9) என்று கேட்டார். சோர்ந்துபோன எலியாவை கர்த்தர், மீண்டும் ஊழியத்திலே நிலைநிறுத்தினார்.

சோர்ந்துபோன தேவபிள்ளைகளே, எழுந்திருங்கள், திடன் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை உற்சாகத்தின் ஆவியினாலும், தேவ ஆவியினாலும் உங்களை நிரப்புவாராக! ஒரு அற்புதம் செய்வாராக!

நினைவிற்கு:- “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” (சங். 145:14).