நற்கிரியை!

“சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்” (ரோம. 2:7).

முதலாவது, நாம் சோர்ந்துபோகாமல், ஜெபிக்க வேண்டும். இரண்டாவது, சோர்ந்து போகாமல், நன்மை செய்ய வேண்டும். மூன்றாவது, சோர்ந்துபோகாமல், நற்கிரியைகளை செய்ய வேண்டும். இன்றைக்கு உலகத்தாரும், நற்கிரியைகளை செய்கிறார்கள். நிறைய பள்ளிக் கூடங்களை கட்டுகிறார்கள். அநாதைப் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களை கட்டி, பிள்ளைகளுடைய அறிவு கண்களைத் திறந்து வைக்கிறார்கள். கிறிஸ்தவர்களும் அப்படி செய்யக்கூடும்.

ஆனால் நாம் செய்கிற நற்கிரியைகளுக்கும், உலகத்தார் செய்கிற நற்கிரியை களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் நற்கிரியைகளோடுகூட, கிறிஸ்துவின் அன்பை, ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறோம். நற்கிரியைகளோடுகூட, மரணத்துக்கும், பாதாளத்துக்கும் தப்புகிற, இரட்சிப்பின் வழிகளை, ஜனங்களுக்கு சொல்லுகிறோம். உலகப்பிரகாரமான உதவிகளோடு, கிறிஸ்துவையும், அவர்கள் சுதந்தரிக்கும்படி, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி, வழி நடத்துகிறோம்.

நீங்கள் உண்மையிலேயே நற்கிரியைகளை செய்யும்போது, ஜனங்கள் உங்களை மதமாற்றம் செய்வதாக குற்றம் சாட்டலாம். சுய லாபம் கருதி, ஜனங்களை உங்கள் மதத்திற்கு இழுப்பதற்காக, கிறிஸ்தவர்கள் சமுகசேவை செய்கிறார்கள் என்று சொல்லலாம். ஜனங்கள் உங்களை அடித்து, சிறையிலே போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஜனங்கள் உங்களுடைய உள்ளத்தைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், சோர்ந்துபோய், நற்கிரியை செய்வதிலே ஓய்ந்துவிடாதிருங்கள். நெகேமியா ஜெபித்தார், “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும், அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்” (நெகேமி. 13:14) என்று சொன்னார்.

நீங்கள் நற்கிரியைகளை செய்யும்போது, கர்த்தர் மனம் மகிழுவார். சந்தோஷப் படுவார். உங்களை உற்சாகப்படுத்துவார். அது தேவனுடைய நாமத்துக்கு மகிமையாக விளங்கும். இயேசு சொன்னார், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது” (மத். 5:16).

நாம் மனுஷருக்கு செய்கிற உதவி மட்டுமே, “நற்கிரியை” என்று எண்ணி விடக் கூடாது. கர்த்தருக்கு செய்கிற நற்கிரியையும் உண்டு. ஒரு நாள், “ஒரு ஸ்திரீ, விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள, வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து, அவர் போஜன பந்தியிலிருக்கும்போது, அந்த தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்” (மத். 26:7).

யோசித்துப் பாருங்கள். சாப்பிடுகிற நேரத்தில், தலையில் அந்த தைலத்தை ஊற்றினால், அவர் எப்படி சாப்பிட முடியும்? ஊற்றின தைலமோ, மகா விலையுயர்ந்ததாயிருந்தது. “சீஷர்கள் இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள் என்றார்” (மத். 26:10, மாற். 14:6).

நினைவிற்கு:- “இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத். 26:13).