நிழலாட்டமாய்!

“நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனா யிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:2).

இந்த மாதம் முழுவதிலும் “முகமுகமாய்” என்ற வார்த்தையை தியானிக்க கிருபை செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். கர்த்தரை, முகமுகமாய்ப் பார்க்கும்படி , உங்களுடைய உள்ளத்தையும், இருதயத்தையும், ஆயத்தமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய முகம், இயேசுவைப்போல மாறட்டும். உங்களுடைய முகச் சாயலில், ஜனங்கள் கிறிஸ்துவின் பரிசுத்த அழகைப் பார்க்கட்டும். தன் கண்கள் உயிரோடிருக்கிற மீட்பரைக் காண வேண்டும் என்பதற்காக , பக்தனாகிய யோபு, தன் கண்களோடு உடன்படிக்கை செய்தார் (யோபு 31:1).

ஒருவனுக்குள் அசுத்த ஆவியோ, அல்லது பிசாசோ இருக்குமென்றால், அவனால் உங்களுடைய கண்ணை நேருக்கு நேரில் பார்க்க முடியாது. உங்களுக்குள்ளிருக்கிற ராஜாதி ராஜாவாகிய கர்த்தருடைய மகிமையைக் காண முடியாதபடி, அவன் தன் கண்ணை திருப்பிவிடுவான். காயீனுடைய உள்ளம் பொறாமையினாலும், பகையினாலும் நிரம்பியிருந்தபடியால், அவன் முகநாடி வேறுபட்டது (ஆதி. 4:5). கர்த்தர் காயீனுடைய முகத்தைப் பார்க்கும்படி வந்தபோது, அவனை பார்த்து, “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? (ஆதி.4:6,7) என்று கேட்டார்.

தாவீதின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ளாத, சவுலின் முகரூபம் மாறினது. இதன் விளைவாக தேவனால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைப்பிடித்தது. அவன் தாவீதை காய்மகாரமாய் பார்த்தார் (1 சாமு. 19:9). உலகத்தில் பாவத்திலே வாழுகிற அநேகம் பேருடைய முகத்தைப் பாருங்கள். குடிகாரனுடைய முகம், வேசிக்கள்ளனுடைய முகம், சூதாடுகிறவனின் கண்கள், கொள்ளைக்காரனுடைய தோற்றம் பயங்கரமாயிருக்கும். கர்த்தர் மகிமை பொருந்தினவராய் வரும்போது, அவரை முகமுகமாய் இவர்களால் சந்திக்கவே முடியாது. அதே நேரம், பரிசுத்தவான் களுடைய முகத்திலே கருணையும், சந்தோஷமும் குடியிருக்கும். சந்தோஷத்தோடு கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிழ்ந்து களிகூருவார்கள்.

வேதம் சொல்லுகிறது, “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4). கர்த்தரை சந்திக்க நாம் எப்படிப்பட்டவர்களா யிருக்க வேண்டும்? முதலாவதாக, “அவர் சுத்தமுள்ளவராய் இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவா. 3:3). இரண்டாவதாக, “அவர் ஒளியிலிருக்கிறதுபோல, நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (1 யோவா. 1:7). மூன்றாவதாக, “அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் அவர் நடந்தபடியே, தானும் நடக்க வேண்டும்” (1 யோவா. 2:6). நான்காவதாக, “நான் உலகத்தான் அல்லாததுபோல, நீங்களும் உலகத்தாரல்ல” என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவா. 17:14).

நீங்கள் முயற்சியெடுப்பீர்களென்றால், நான் இயேசுவைப்போல மாற வேண்டுமென்ற இருதயத்துடிப்பு உங்களுக்கு இருக்குமென்றால், அவருடைய தாழ்மை, அவருடைய பரிசுத்தம், அவருடைய ஜெப ஜீவியம், ஆகிய அவருடைய குணாதிசயங்களை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார்” (1பேது. 2:21).