முகமுகமாய் தேவ சந்நிதியில்!

“ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர் களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும் படி ஜாக்கிரதையாயிருங்கள்” (2 பேது. 3:14).

ஒரு மாலை வேளையிலே, கங்கை நதியோரமாய், சில சுற்றுலாப் பயணிகள் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். வழியிலே ஒரு சுடுகாட்டில், மரித்துப்போன ஒரு பத்து வயது சிறுவனை, விறகுகளை அடுக்கி, எரியூட்டலானார்கள். அப்பொழுது அவனுடைய தாய், நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு , தலைவிரி கோலமாய், “மகனே, இனி உன்னைக் காணவே முடியாதே! நீ எரிந்து சாம்பலாய்ப் போய்விடுவாயே?” என்று அழுது புரண்டாள். யாராலும், அவளைத் தேற்றவே முடியவில்லை. மரணத்துக்கு அப்பாலுள்ள வாழ்க்கையை பற்றி அவளுக்கு தெரியாது. மறுபடியும் மகனை பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்லை.

சுற்றுலாப் பயணிகள் இன்னும் ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்பார்கள். அங்கு ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்தின் பின்பாக, ஒரு சிறுவனை அடக்கம்பண்ண கொண்டு வந்திருந்தார்கள். அவனுக்கும்கூட, ஏறக்குறைய பத்து வயது இருக்கும். பிரேதப் பெட்டியை மூடுவதற்கு முன்பாக, அந்த தாய் அன்பு மகனுடைய முகத்தைப் பார்த்து சொன்னாள். “மகனே, உன்பேரில் எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறபடியால், என் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது. என் உள்ளத்திலே இயேசு இருக்கிறபடியால், உன்னை நான் கர்த்தருடைய வருகையிலே சந்திப்பேன் என்ற மகிமையான நம்பிக்கையுண்டு. விரைவில் உன்னையும், கிறிஸ்துவையும், நான் முகமுகமாய் பார்ப்பேன்” என்று சொன்னாள். “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவா. 3:3).

இன்றைக்கு கிறிஸ்தவ உலகத்தில், பிரசங்கிமார், “பொருளாதார ஆசீர்வாதம், பணம், பணம் என்று பேசுகிறார்கள். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விட்டால், சைக்கிள் வைத்திருக்கிற உங்களுக்கு மோட்டார் சைக்கிள் கிடைக்கும். கார் கிடைக்கும். ஒரு வீடு போதாது. பத்து வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் நினைக்கிறதெல்லாம் நடக்கும். பெரிய செல்வந்தனாகி விடுவீர்கள்” என்று உலக மேன்மைகளையே பேசுகிறார்கள்.

கர்த்தருடைய வருகையும், அவரை சந்திக்கிற நாளும், மிக விரைவாக வருகிறது என்ற சத்தியத்தை அநேகர் மறைத்து விடுகிறார்கள். வர வர விசுவாசிகளை தாலாட்டி, மனம்போல எப்படியும் வாழலாம். கிருபை உங்களை காத்துக் கொள்ளும். அந்த கிருபையால், கர்த்தர் உங்களுடைய கடந்த கால பாவத்தையும் மன்னிப்பார். நீ எவ்வளவு பாவம் செய்தாலும், வருங்காலத்துப் பாவங்களையும் மன்னிப்பார் என்று பிரசங்கிக்கிறார்கள். இயேசு இடுக்கமான வழியை காண்பித்தாலும்கூட, நவீன பிரசங்கிமாரோ, அகலமான, உல்லாசமான பாதையை காண்பிக்கிறார்கள். கிறிஸ்துவுக்காகப் படுகிற பாடுகளையும், இயேசுவின் இரத்தத்தையும் மறைத்து விட்டார்கள்.

ஆனால் உண்மையில் சிலுவையின் பாதையே, உங்களை சிங்காசனத்துக்கு நடத்தும். பாடுகளின் பாதையே, பரலோகத்துக்கு கொண்டுச் செல்லும். இக்காலத்துப் பாடுகள் இனி உங்களில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகளல்ல. கர்த்தரை முகமுகமாய் காண பரிசுத்தத்தோடு முன்னேறிச் செல்லுங்கள்.

நினைவிற்கு:- “ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்” (2 பேது. 3:14).