கர்த்தருடைய சிநேகிதன்!

“ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11).

பழைய ஏற்பாட்டிலே, பக்தர்களின் மிக உயர்ந்த ஸ்தானம், கர்த்தருடைய தோழன், சிநேகிதன் என்பதாகும். புதிய ஏற்பாட்டிலே, மகா உன்னத ஸ்தானம், கிறிஸ்துவின் மணவாட்டி. “புதிய எருசலேம் மணவாளனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல இருந்தது” (வெளி. 21:2). கர்த்தர் நம்மை அநாதி சிநேகத்தால் சிநேகிப்பவர். தயவினாலும், காருண்யத்தினாலும் தன்னண்டை இழுத்துக்கொள்ளுகிறவர் (எரே. 31:3). அவர் வல்லமையுள்ள தேவன், நமக்கோ தகப்பனாயிருக்கிறார். ஆத்தும நேசராயிருக்கிறார்.

“சிநேகிதன்” என்ற வார்த்தை மிக ஆழமானது, அருமையானது. “உயிர் கொடுப்பான் தோழன்” என்பது பழமொழி. “உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்று திருவள்ளுவர் சொன்னார். கர்த்தருடைய சிநேகிதம், உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிட்டது. அவர் நம்மேல் முடிவு பரியந்தமும் அன்பு வைக்கிறவர் (யோவா. 13:1). கர்த்தர் மோசேயை, “என் சிநேகிதனாகிய மோசே” என்று அழைத்தார். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11). “நான் அவனுடன் (மோசேயுடன்) மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும், பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்” (எண். 12:8).

மோசேக்கு எண்பது வயதானபோது, கர்த்தர் ஓரேப் பர்வதத்திலே, முட்செடியிலே தரிசனமாகி, அவரை தன் நண்பனாக்கினார் (யாத். 3:2). திக்குவாயும், மந்த நாவுமுடைய மோசேயின் பெலவீனத்தைக் குறித்து கர்த்தர் பொருட்படுத்தவில்லை. கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலரை, ஒரு மேய்ப்பனைப்போல, மோசேயின் கீழ் நாற்பது ஆண்டுகள் நடத்திக்கொண்டு சென்றார். மோசேயை கனப்படுத்தி, இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக மேன்மைப்படுத்தினார், உயர்த்தினார் என்பதை எண்ணிப்பாருங்கள்

மோசேயும்கூட, கர்த்தர் தன்மேல் வைத்திருந்த அன்புக்கு பாத்திரவானாக முடிவுவரையிலும் நடந்துகொண்டார். இஸ்ரவேல் ஜனங்களுக்காக, திறப்பிலே நின்று, கர்த்தரிடத்தில் போராடி மன்றாடினார். இதனால் பல முறை இஸ்ரவேலரின் ஜீவன் காப்பாற்றப்பட்டது. கர்த்தர் மோசேயைக் கொண்டுதான், வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களை எழுதச் செய்தார்.

மோசே மரித்தபோது, தேவனே முன் நின்று, மோசேயின் சரீரத்தை அடக்கம் செய்தார். புதிய ஏற்பாட்டிலே, இயேசுகிறிஸ்து, மோசேயை மறுரூப மலைக்குக் கொண்டு வந்தார். ஒரு பக்கம், இயேசுவின் மூன்று சீஷர்களும், மறுபக்கம், மோசே யும், எலியாவும் அங்கே வந்து, கிறிஸ்துவினுடைய மரணத்தைக் குறித்து பேசினார்கள். மட்டுமல்ல, வெளி. 15-ம் அதிகாரத்திலே, பரலோகத்தில் பாடப்படுகிற பாடலைக் குறித்து வாசிக்கிறோம். “அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும், பரலோகத்திலே பாடினார்கள்” (வெளி. 15:3).

தேவபிள்ளைகளே, ஆண்டவர், ஒரு சிநேகிதனைப்போல உங்களோடு கடந்து வருகிறார். “சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்ட வேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு” (நீதி. 18:24).

நினைவிற்கு:- “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனு டைய சிநேகிதனென்னப்பட்டான்” (யாக். 2:23).