சாந்தகுணம்!

“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனா யிருந்தான்” (எண். 12:3).

மோசே தேவனை முகமுகமாய் தரிசிக்க, அவரிலிருந்த அடுத்த குணாதிசயம், சாந்தகுணமாகும். தெய்வீக சாந்தகுணம். இன்றைக்கு உலகத்திலுள்ள மனுஷரு டைய முகத்தைப் பார்த்தால் எரிச்சலோடு, கோபமும் சேர்ந்து, எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது. வீடுகளிலே குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்குள்ளாக, எவ்வளவு டென்ஷன்! பாட புத்தகத்தைக் காணோம், பேனா, பென்சிலை காணோம். ஷூவை எங்கே வைத்தாய்? சாக்சை எங்கே தொலைத்தாய்? என்கிறார்கள்.

மலைப்பிரசங்கத்தில், இயேசு சொன்னார், “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (மத். 5:5). இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடின, சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், அகிம்சையிலும், சத்தியாகிரகத்திலும் நம்பிக்கையில்லாமலிருந்தார். அவர் சொன்னார், “யுத்தமின்றி, இரத்தமின்றி ஒருநாளும் சுதந்திரத்தைப் பெற முடியாது. மயிலே, மயிலே இறகு போடு என்றால் வெள்ளைக்காரன், இந்தியாவை விட்டு வெளியேறவே மாட்டான். சுதந்திரம் தரவுமாட்டான்” என்றார்.

ஆனால் காந்திஜியோ, “நான் மத். 5:5-ஐ விசுவாசிக்கிறேன். சாந்தகுணத்தால் உலகத்தையே சுதந்தரிப்பார்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே. அப்படியானால், இந்தியாவை நாம் ஏன் சுதந்தரிக்க முடியாது? நான் வன்முறைக்கு செல்லமாட்டேன். அகிம்சை, உண்ணாவிரதம் மூலமாக நிச்சயமாய் சுதந்திரம் பெறுவேன்” என்றார். அப்படியே காந்திஜி, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தார்.

இயேசு கிறிஸ்துவினுடைய சுபாவம் சாந்தகுணத்தால் அலங்கரிக்கப்பட்டதா யிருந்தது. “இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார்” (மத். 21:4). உலகத்தில் வாழுகிற நாட்களில் அவர் சிங்கம் போலவோ, காட்டு மிருகங்களைப்போலவோ, ஒருநாளும் நடந்துகொள்ளவில்லை. சாந்தமுள்ள ஆட்டுக்குட்டியாயிருந்தார். அவருடைய பிறப்பிலிருந்து, முடிவு வரையிலும், தெய்வீக சாயலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஒரு அம்மா, மாய்மாலமாக தன்னைத் தாழ்த்தி, சாட்சி சொன்னார்கள். “என் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்மேல் அவ்வளவு எரிச்சலாக இருந்தபோதும், நானோ, தாழ்மையோடும் சாந்தத்தோடும் சகித்துக்கொள்கிறேன். நான் ஒரு புழு. மனுஷரால் நிந்திக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டுமிருக்கிறேன். “யாக்கோபு என்னும் சிறு பூச்சியே பயப்படாதே” என்று சொன்னவர் என்னை தேற்றுகிறார்” என்றெல்லாம் சொன்னார்கள். இதை ஒரு குறும்புக்கார வாலிபன் கேட்டுக்கொண்டிருந்தான். உண்மையிலே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அறியும்படி, அவர்கள் பஸ்சில் ஏறும்போது, பின்னால் போய், கால் விரலை ஒரு மிதி மிதித்து விட்டான். அவ்வளவுதான். அவர்களுக்கு பொங்கி வந்ததே ஒரு கோபம். குற்றால அருவிபோல, அவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள், சரமாரியாக வந்தன.

அவர்களைப் பார்த்து அந்த வாலிபன், நீங்கள் புழு பூச்சி என்றெல்லாம் சாட்சி சொன்னீர்கள். ஆனால் நீங்கள் உண்மையிலே, சீறுகிற கருநாகப்பாம்பு என்றான். “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும், தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத் தையும் அடையும்படி நாடு” (1 தீமோத். 6:11).

நினைவிற்கு:- “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலி. 4:5).