நமது சுதந்தரம்!

“இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேது. 1:4).

பரலோகத்திலே, உங்களுக்கு நித்திய சுதந்தரம் உண்டு. பூமியிலே உங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ, வயலோ ஒன்றுமில்லாமலிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் நம்பிக்கையாயிருந்து, அவருக்கு ஊழியம் செய்வீர்களென்றால், உலக வாழ்க்கைக்குப் பின்பாக, பரலோக ராஜ்யத்தில் அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய நித்திய சுதந்தரங்கள் உங்களுக்கு உண்டு.

இந்த உலகத்திலிருந்து ஒன்றையும், உங்களால் பரலோகத்துக்கு கொண்டு போக முடியாது. காணப்படுகிற இவைகள், அநித்தியமானவை, அழியக்கூடியவை, வாடிப்போகக் கூடியவை. மரித்த ஒரு மனிதனுடைய சரீரத்தைக்கூட, கெடாமல் பாதுகாக்க முடியாது. மனிதனுடைய ஜீவன் எப்படிப்பட்டது? “கொஞ்சக் காலந் தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” (யாக். 4:14). அப்படிப்பட்ட மனுஷன்மேல், கர்த்தர் அன்பு செலுத்தி, அவனுக்காக நித்திய வாசஸ்தலங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.

இயேசு கிறிஸ்து சொன்னார், “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும், அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (மத். 6:19-21).

“உங்களுடைய சுதந்தரம்” என்று சொல்லும்போது, அது பரலோக வீடுகள் மட்டுமல்ல, அங்குள்ள ஜீவ நதிகள், ஜீவவிருட்சங்கள்கூட சுதந்தரங்களாகும் (வெளி. 22:1,2). “கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக் கிறது” (1 பேது. 1:5).

ஓட்டத்தை ஜெயத்தோடு ஓடி முடித்தவர்களுக்கு, பரலோகத்திலே எண்ணற்ற கிரீடங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அப். பவுல் உற்சாகத்தோடு சொன்னார், “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோத். 4:7,8).

இங்கே நீதியின் கிரீடத்தைக் குறித்து அப். பவுல் பேசுகிறார். யாக். 1:12-லே ஜீவ கிரீடத்தைக் குறித்து அப். யாக்கோபு பேசுகிறார். சாலொமோன் ஞானி, நீதிமொழிகள் 19-ல் அலங்காரமான கிரீடத்தைப் பற்றியும், நீதி. 16:31-ல் மகிமையான கிரீடத்தைப் பற்றியும் பேசுகிறார். இன்னும் வாடாத கிரீடம் (1 பேது. 5:2-4). அழிவில்லாத கிரீடம் (1 கொரி. 9:25) பொற்கிரீடம் (சங். 21:3). பரிசுத்த கிரீடம் (யாத். 29:6) என்று பலவிதமான கிரீடங்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். ஆனால் ஒரு எச்சரிப்புமுண்டு. “இதோ, சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாத படிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” (வெளி. 3:11).

நினைவிற்கு:- “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:6).