முகத்தின் பிரகாசம்!

“கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையா யிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்” (எண். 6:25,26).

கர்த்தருடைய முகத்தைத் தேடும்போது, முதலாவது, உங்களுக்கு கிடைப்பது தேவ கிருபை. இரண்டாவது, தேவ சமாதானம். மூன்றாவது, தேவ பிரசன்னம். நீங்கள் கர்த்தருடைய முகத்தையேப் பார்த்துக்கொண்டிருப்பீர்களென்றால், நான்காவதாக, உங்களுடைய முகத்தையும்கூட, அவர் பிரகாசிக்கச் செய்வார். “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5).

சந்திரன், இயற்கையாக ஒளி கொடுப்பது இல்லை. ஆனால் அது, சூரியனைச் சுற்றி வருவதால், சூரியனின் பிரகாசத்தில் ஒரு பகுதி சந்திரனில் இறங்குகிறது. இரவில் குளிர்ச்சியான வெண் ஒளியை வீசுகிறது. தேவபிள்ளைகளே, நீதியின் சூரியனாகிய, கர்த்தருடைய முகத்தைத் தேடும்படி, தாகத்தோடிருங்கள். அவரது மகிமையின் ஒளி, உங்கள் முகத்தில் நிச்சயமாகவே வீசும். “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன், இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி. 4:6).

உலகத்தார் தங்கள் முகங்கள் அழகாயிருக்கும்படி பவுடர், ஸ்னோவையும், நாகரீகங்களையும் தேடுகிறார்கள். ஆனால் நாமோ, கர்த்தருடைய முகத்தைத் தேடுகிறோம். “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, அப்பா” என்று அவரு டைய முகத்தின் சாயலால் திருப்தியாகும்படி, தேவ பிரசன்னத்தை வாஞ்சியுங்கள். நம் கர்த்தர் முற்றிலும் அழகுள்ளவர். ஆயிரம், பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். அவருடைய சாயலிலே, அனுதினமும் நீங்கள் பிரகாசமடைய வேண்டும்.

கர்த்தருடைய முகத்தைத் தேட, நேச வைராக்கியத்தோடு மோசே பக்தன் சீனாய் மலைக்கு ஏறிப்போனார். நாற்பது நாட்கள் வீதம், தேவனுடைய முகத்தைத் தொடர்ந்து தரிசித்துக் கொண்டேயிருந்தபடியால், அவர் கீழே இறங்கி வந்தபோது, அவருடைய முகத்தை ஜனங்கள் பார்க்கக்கூடாதபடி, அவ்வளவு பிரகாசமாய் இருந்தது. இதனால் அவர் தன் முகம் பிரகாசத்தை மறைக்க, மோசே முக்காடிட்டுக் கொண்டார்.

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தனி அறையிலே, கர்த்தருடைய முகத்தை தேட நேரம் செலவழிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் உள்ளம், குடும்பம், ஊழியம் ஒளி வீசும். பக்தன் பாடுகிறான். “எங்கே தேடுவேன், நான் எங்கே தேடுவேன், என் நேசர் இயேசுவை நான் எங்கே தேடுவேன்.” ஆம், இரவிலே மலையில் ஏறி, பிதாவைத் தேடின இயேசுவின் முகம், மறுரூபமலையில் சூரியனைப்போல பிரகாசித்தது (மத். 17:2). தன்னை கல்லெறிய வந்த மக்கள் மத்தியிலே, கர்த்தருடைய முகத்தைத் தேடின, ஸ்தேவானின் முகம் தேவதூதனின் முகத்தைப்போல இருந்தது (அப். 6:15).

கர்த்தருடைய முகத்தை ஆவலோடு தேடின, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, என்பவர்கள், வேறு விக்கிரகத்தை நோக்கிப் பார்ப்பதுமில்லை. அதைப் பணிந்து கொள்ளுவதுமில்லை என்று உறுதியாய் நின்றார்கள். ராஜா அக்கினி சூளையை ஏழு மடங்கு சூடாக்க உத்தரவிட்டான். கர்த்தருடைய முகத்தைத் தேடின, அந்த எபிரெய வாலிபர்களை கர்த்தர் வெட்கப்படுத்தவில்லை. அவர்களோடு கர்த்தர் ஒருவராக அக்கினிச் சூளையில் நடந்தார்கள். அக்கினியின் உக்கிரங்களை அவித்தார்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்” (உபா. 5:4).