என் கண்களே காணும்!

“அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது” (யோபு 19:27).

யோபு பக்தனுக்கு, “மீட்பராகிய கர்த்தரைக் கண்குளிர காண்பேன்” என்ற மகிமையான நம்பிக்கை இருந்தது. இயேசு கிறிஸ்துவை, அவர் “மீட்பர்” என்று அழைக்கிறார். “மீட்பர்” என்றால் என்ன? பிசாசின் கையிலிருந்து மீட்டெடுக்கிறவர். பாவத்தின் பிடியிலிருந்தும், பாவ பழக்க வழக்கங்களிலிருந்தும் மீட்டெடுக்கிறவர். சாபங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீட்டெடுக்கிறவர். ஆகவே அவர் “மீட்பர்.” மட்டுமல்ல, உயிரோடிருந்து, கிறிஸ்துவை முகமுகமாய் தரிசிப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமலிருந்தாலும், தான் மரித்த பின்பு, “மரித்தோரின் உயிர்த் தெழுதலில்” பங்கு பெற்று, அவரை காண்பேன் என்று சொன்னார்.

யோபு பக்தனுடைய வார்த்தைகள் என்ன? “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவைகள் அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து, தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்” (யோபு 19:25-27). கர்த்தரை முகமுகமாய்ப் பார்ப்பதற்கு முக்கியமான ஒரு வழி, பரிசுத்தமே. “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி. 12:14). மலைப் பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து சொன்னார், “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” (மத். 5:8).

உலகத்திலுள்ள பல மதங்களும், மார்க்கங்களும் பரிசுத்தத்தை நாடுகின்றன. ஆனால் உண்மையான வழியை அவர்கள் கண்டுபிடிக்காமல், சரீரத்தை ஒடுக்கு வதினால், சவுக்குகளினால் தங்களைத் தாங்களே அடித்துக்கொள்வதினால், சுகபோகத்தைத் துறந்து, முள் நிறைந்த படுக்கையில் படுப்பதினால், தெய்வத்தைத் தரிசித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். வேறு சிலர் கழுத்தளவு தண்ணீரிலே நின்று, ஆயிரக்கணக்கான சுலோகங்களை உச்சரிப்பதின் மூலம், இறைவனைக் கண்டுவிடலாம். இல்லறத்தைத் துறந்து, துறவரம் பூண்டு, சாதுவாக, சந்நியாசியாக, துறவியாக, முனிவராக, ரிஷிகளாக மாறி விட்டால், இறைவனை முகமுகமாய் தரிசித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் அவர்களால் பரிசுத்தத்தை அடைய முடிவதில்லை. ஏன் தெரியுமா? இந்த உலகம் அசுத்தத்துக்குள்ளும், சாத்தானுக்குள்ளும் கிடக்கிறது. அவன் வான மண்டலத்திலிருந்து பொல்லாத இச்சையின் ஆவி, விபச்சார ஆவி, வேசித்தன ஆவிகளை அனுப்புகிறான். எண்ணங்களிலே, கனவுகளிலே ஊடுருவுகிறான். மனிதனுடைய சிந்தையிலே, வெள்ளம் போல அசுத்தங்களைக் கொண்டு வருகிறபடியால், மனுஷன் பரிசுத்தத்தைப் பெற முடியாமல், தடுமாறுகிறான்.

“பரிசுத்தம்” எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அதுதான் கல்வாரி மலையிலே, கொல்கொதா மேட்டிலே, நம்முடைய பரிசுத்தத்துக்காக தமது இரத்தத்தை சிந்திக் கொடுத்த சிலுவையில்தான் ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது. அதன்பின்பு, ஜெபத்தின் மூலமாக, வேத வசனங்கள் மூலமாக, பரிசுத்த ஆவியானவர் மூலமாக நீங்கள் பரிசுத்தத்தைப் பூரணமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். அப்பொழுது நீங்கள் நம்பிக்கையோடு, “நான் கர்த்தரை முகமுகமாய்ப் பார்ப்பேன்” என்று சொல்லலாம்.

நினைவிற்கு:- “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான், ஒரு கன்னிகையின் மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1).