அக்கினியின் உக்கிரத்தை!

“அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்” (எபி. 11:34).

விசுவாசத்திற்குக் கீழ்ப்படியாத, வல்லமையே கிடையாது. விசுவாசத்திற்கு, ராஜ்யங்கள் கீழ்ப்படிகிறது. விசுவாசம், சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போடுகிறது. மட்டுமல்ல, விசுவாசத்திற்கு, அக்கினியின் மேல் ஆளுகையும், அதிகாரமும் உண்டு. விசுவாசம் உள்ளவனை, அக்கினி கூட மேற்கொள்ளுவதில்லை.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவிற்கு, அந்த விசுவாசம் இருந்தது. ஆகவே, அந்த விசுவாசத்திலே சார்ந்துகொண்டு, ராஜா நிறுவின பொற்சிலையை வணங்க மறுத்தார்கள். “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” என்று முழங்கினார்கள் (தானி. 3:17).

அவர்கள் விசுவாசத்தினாலே, அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள். அந்த சூளையின் தீக்கங்குகள், அவர்களுக்கு மென்மையான, குளிர்ச்சியான, மலர்களைப் போலாயிற்று. மட்டுமல்லாமல், அவர்கள் விசுவாசம், தேவகுமாரனையும், சூளையில் இறங்கி நடக்கப்பண்ணிற்று. அவர்கள் அக்கினியின் நடுவில், விடுதலையாய் கிறிஸ்துவோடுகூட உலாவினார்கள். அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல், அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்தது (தானி. 3:27).

கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசாயா 43:2). அவர்கள் அக்கினியின் உக்கிரத்தை அவித்தது மாத்திரமல்ல, பட்டயக்கருக்குக்கும் தப்பினார்கள். பட்டயக்கருக்கும் ஒரு அக்கினிபோல்தானே! ஓங்கிய பட்டயத்தை வெட்டாதபடி, நிறுத்தக்கூடிய வல்லமை விசுவாசத்திற்கு உண்டு. பட்டயத்தை ஏந்துகிற கைகளை முடக்கிப்போடுகிற பெலன், விசுவாசத்திற்கு உண்டு.

‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது நம் நாட்டு பழமொழி. விசுவாசமுள்ள வார்த்தைகளை, வாயினால் பேசும், தேவனுடைய பிள்ளைகள் பிழைப்பார்கள் பட்டயக்கருக்குக்கு தப்புவிக்கப்படுகிறார்கள். ஆம், அந்நியருடைய பட்டயமானாலும் சரி, நியாயத்தீர்ப்பின் பட்டயமானாலும் சரி, உங்கள் விசுவாசம் அவைகளுக்குத் தப்புவிக்கும். ஒருவேளை சத்துருவின் ஆயுதம் பட்டயக் கருக்கானால், உங்கள் விசுவாசம் கேடகத்தைப் போல் விளங்கும். விசுவாசக் கேடகத்தை ஏந்திக்கொள்ளுங்கள். கேடகம் உறுதியானது; பாதுகாப்பானது. அம்புகள் ஆனாலும், ஈட்டிகளானாலும், விசுவாசக் கேடகத்தை ஊடுருவிச் செல்லவே முடியாது.

ஆகவே, அப்.பவுல், “எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என்று ஆலோசனை கூறுகிறார் (எபே. 6:16). விசுவாசக் கேடகத்தைப் பிடித்து, பட்டயக்கருக்கு தப்பின ஒரு பரிசுத்தவான் மார்ட்டின் லூத்தர் ஆவார். அவரை கொலை செய்ய மதக்குருக்களும், அரசாங்கமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

ஆனால், அவர் பிடித்திருந்த விசுவாச கேடகம் என்ன தெரியுமா? ரோமர் 1:17-ல் உள்ள, “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்கிற வசனமே. தேவபிள்ளைகளே, விசுவாசம் உங்களை எல்லா அந்தகார வல்லமைக்கும், தப்புவிக்கும்.

நினைவிற்கு:- “எங்கள் தேவனுடைய கரம் எங்கள் மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது” (எஸ்றா 8:31).