பலவீனத்தில் பலன் கொண்டார்கள்!

“விசுவாசத்தினாலே பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர் களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்” (எபி. 11:34).

பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், விசுவாசத்தினால் செய்த அரிய பெரிய காரியங்களை, விசுவாசத்தினாலே நீங்களும் செய்ய முடியும் (எபி. 11-ம் அதிகாரம்). ஏனென்றால், தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். மட்டுமல்ல, அவர் பட்சபாதம் இல்லாதவர். உங்களையும் பயன்படுத்துவார்.

உங்களுடைய சரீரம் பலவீனமானதுதான். சரீர உறுப்புகள், மாம்சத்திலானவைகள் தான். நோகளையும், வியாதிகளையும், விபத்துகளையும், தாங்கக்கூடாதது தான். ஆனால் இந்தப் பலவீனமான சரீரத்தில், விசுவாசமானது, தெய்வீக பெலனைக் கொண்டு வருகிறது. உன்னத பலத்தினால் நிரம்பியிருக்கச் செய்கிறது. விசுவாச வீரர்கள், தங்கள் பலவீனத்தை நோக்காமல், விசுவாசக் கண்களினால் தேவபெலனைக் கண்டு, சார்ந்துகொண்டு ஜெயங்கொண்டார்கள். தேவபெலன் உங்களுக்குள் இருந்தால்தான், நீங்கள் சாத்தானை எதிர்க்க முடியும். சத்துருவினுடைய போராட்டங்களை முறியடிக்க முடியும்.

உலகத்தாருக்கு பலவீனம் வரும்போது, உடனே அவர்கள் எந்த டாக்டர்களைப் பார்க்கலாம், எந்த டானிக்குகளைக் குடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு இருக்கிற, டாக்டர் கிறிஸ்துவே. அவர் உங்களுக்குக் கொடுக்கும் டானிக் என்ன தெரியுமா? அதுதான் விசுவாசம். அந்த விசுவாசத்தினாலே, நீங்கள் பலவீனத்தில் பலன் கொள்ளுகிறீர்கள்.

அநேகர் பலவீன நேரத்தில், சோர்ந்துபோகிறார்கள். கர்த்தர் ஏன் என்னை மட்டும் இப்படி பெலவீனமாக, வியாதியோடு வைத்திருக்கிறார் என்று முறுமுறுக்கிறார்கள். பலவீனத்தின் நிமித்தம் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், கர்த்தருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், செய்ய முடியாமல், தடுமாறுகிறார்கள். ஆனால் உங்களுடைய பலவீனத்தை எண்ணிச் சோர்ந்து போகும்படி, கர்த்தர் உங்களை அழைக்கவில்லை. பலவீனத்தில், பலமுள்ளவர்களாய் விளங்கும்படியே, கர்த்தர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். 1 கொரி. 1:27-ஐ வாசித்துப் பாருங்கள். “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.”

தேவபிள்ளைகளே, உங்களுக்கு பலவீனம் இருக்குமானால், அதை எண்ணி விசுவாசத்தினால் மேன்மை பாராட்டுவீர்களாக! அப்.பவுலின் அனுபவம் என்ன? “கிறிஸ்துவின் வல்லமை, என் மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமா யிருக்கும்போதே, பலமுள்ளவனாயிருக்கிறேன் (2 கொரி. 12:9,10). பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர் (சங். 8:2).

தேவபிள்ளைகளே, இந்த நாட்கள், நீங்கள் ஆண்டவருக்காக அரிய பெரிய காரியங்களைச் செய்ய வேண்டிய நாட்கள். எதிரே இருக்கிற எரிகோக்களை தகர்த்து நொறுக்க வேண்டிய நாட்கள். தடையாய் இருக்கிற மலைகளைப் பெயர்த்து, சமுத்திரத்தில் தள்ளுண்டு போகச் செய்ய வேண்டிய நாட்கள். ஆகவே, உங்கள் பலவீனங்களை உதறிவிட்டு, கர்த்தருக்குள் பெலன் கொள்ளத்தான் வேண்டும். உங்கள் பெலனை, ஸ்திரப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29).