வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்!

“விசுவாசத்தினாலே வாக்குத்தத்தங்களை பெற்றார்கள்” (எபி. 11:33).

வாக்குத்தத்தங்களைப் பெறுவதற்குக்கூட, விசுவாசம் தேவையாய் இருக்கிறது. “வாக்குத்தத்தம்” என்றால் என்ன? பரலோக தேவன், உங்களுக்குக் கொடுத்திருக்கிற உறுதி மொழிகள். உன்னத தேவன், உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிற உயில் பத்திரங்கள்.

“மோட்சப் பிரயாணம்” என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதிய, ஜான் பனியன் என்ற பக்தன், வேதத்தில் முப்பதாயிரம் வாக்குத்தத்தங்கள் இருப்பதைக் கண்டார். இத்தனை ஏராளம் வாக்குத்தத்தங்கள் இருந்தாலும்கூட, கர்த்தர் ஒவ்வொன்றையும் நிறைவேற்றித் தர வல்லமையுள்ளவர். “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம், இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி. 1:20).

தேவன், மனிதனுக்குக் கொடுத்த பல வாக்குத்தத்தங்கள், அவர் தானாக வலிய வந்து, தமது இரக்கங்களினாலும், கிருபையினாலும், மனம் இரங்கி கொடுத்தவைகளாகும். அதே நேரத்தில், தேவபிள்ளைகள் தங்கள் ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும், தேவனிடத்தில் போராடி, விசுவாசத்துடன் பெற்றுக்கொண்ட வாக்குத்தத்தங்களும் உண்டு.

உதாரணமாக யாக்கோபு. அவர் யாப்போக்கு ஆற்றங்கரையிலே, தன் அண்ணனுக்குப் பயந்து, தனிமையாய் இருந்தபோது, இரவு முழுவதும் தேவனோடுகூட போராடினார். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய, நான் உம்மை போக விடுவதில்லை” என்று மன்றாடினார். ஆம், அந்த இரவு, அவர் விசுவாசத்திலே, எத்தனை வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டார்! யாக்கோபாக இருந்தவர், இஸ்ரவேலராக மாறினார். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர், எபிரெயருக்கு முற்பிதாவாய் உயர்த்தப்பட்டார்.

தேவபிள்ளைகளே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட வாக்குத்தத்தங்களை, நிச்சயமாக கர்த்தர் நிறைவேற்றித் தருவார் என்ற விசுவாசத்தோடிருங்கள். அவர் உரைத்த நல்வார்த்தைகளில் ஒன்றாகிலும், ஒருபோதும் தவறிப்போனதேயில்லை. வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளாவிட்டால், சோதனைக்காற்று வீசும்போது, உங்களால் நின்று பிடிக்க முடியாமல் போய்விடும். அதைரியமும் அவிசுவாசமும் சூழ்ந்துகொள்ளும். அன்றைக்கு சீஷர்களைப் பார்த்து, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று இயேசுகிறிஸ்து கேட்டார் (லூக்கா 8:25).

கடல் கொந்தளித்து புயல் வீசியபோது, சீஷர்கள் பிரயாணம் செய்த படகு ஜலத்தால் நிறைந்தது. சூழ்நிலைகளைப் பார்த்த சீஷர்கள், கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொள்ளவில்லை. “தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடிருப்பேன்” என்று கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தத்தைப் பற்றிப் பிடித்திருந்தால், கலங்கி இருந்திருக்க வேண்டியதில்லை (ஏசா. 43:2). ஆனால் வாக்குத்தத்தங்களை மறந்தார்கள். அவிசுவாசம் அவர்களை மேற்கொண்டது.

ஆலயத்திற்குச் சென்று, தேவசெய்தியைக் கேட்கும்போது, “ஆண்டவரே, எந்த வார்த்தைகளோடு என்னோடு பேசப்போகிறீர்?” என்ற எதிர்பார்ப்போடு செல்லுங்கள். கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுப்பார் என்றால், அதை உறுதியாய் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் ஒழிந்து போவதில்லை.

நினைவிற்கு:- “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17).