உயிர்த்தெழுதல்!

“விசுவாசத்தினாலே, ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந் திருக்கப் பெற்றார்கள்” (எபி. 11:35).

விசுவாசம், மரணத்தை ஜெயிக்கிறது! பாதாளத்தின் வல்லமைகளுக்குச் சவால் விடுகிறது! மரணத்தையும், பாதாளத்தையும், ஜெயித்த கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஜெயங்கொண்டவர்களாய், உங்களை வெற்றி நடைபோடச் செய்கிறது. விசுவாசத்தினாலே, ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்!

இயேசு சொன்னார், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?” (யோவா. 11:25,26). இந்த விசுவாசத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதல் பகுதி, மரியாமல் இருக்கக்கூடிய விசுவாசம். இரண்டாவது பகுதி, மரித்தாலும், உயிரோடு எழுப்பப்படும் விசுவாசம். உங்களுக்கு எந்த வகை விசுவாசம் இருந்தாலும், “உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது” என்று கர்த்தர் சொல்லுவார்.

ஏனோக்கின் விசுவாசம், முதல் வகை விசுவாசம். அது மரியாமலும் இருக்கும் விசுவாசம். பூமியில் அவர் 365 ஆண்டு காலங்கள் வாழ்ந்து, விசுவாசத்தினால் மரணத்தைக் காணாதபடி, எடுத்துக்கொள்ளப்பட்டார். இரண்டாம் வருகையில், ஒரு கூட்ட விசுவாசிகள், மரணத்தை ஜெயமாய் விழுங்கி, கர்த்தருக்கு எதிர்கொண்டு போகப்போவதை அவருடைய விசுவாச கண்கள் கண்டதினாலே, மரணத்தைக் காணாத பரிசுத்தவான்களுக்கு முன்னோடியானார்.

இரண்டாவது, மரணத்தை ஏற்றுக்கொள்ளாமல், விசுவாசத்தோடு போராடி, மரித்தவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெறுவது, சாறிபாத் விதவை, தன் மகனை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றாள் (1 இராஜா. 17:22). சூனேமியாளின் விசுவாசத்தினாலும், எலிசாவின் ஜெபத்தினாலும், அவளது மரித்த மகன், உயிரோடு எழுந்தான் (2 இராஜா. 4:35). நாயீனூர் விதவையின் மகன், பாடையில் ஏற்றப்பட்டு சென்றபோதிலும், கிறிஸ்துவால் உயிர்ப்பிக்கப்பட்டான் (லூக். 7:15).

மார்த்தாள், மரியாளின் சகோதரன் லாசரு, மரித்து நான்கு நாட்களாகி, நாறிய போதிலும், உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள் (யோவா. 11:44). 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தனாகிய ஸ்மித்விகிள்ஸ்வொர்த், தன்னுடைய விசுவாசத்தினாலே, மரித்துப்போன ஏறக்குறைய இருபத்திநான்கு பேரை உயிரோடு எழுப்பி யிருக்கிறார்.

ஒரு முறை அவருடைய மனைவி மரித்துவிட்டார்கள். அவர்களைக் குளிப்பாட்டி பெட்டியில் வைத்து, அடக்கம் பண்ணாமல் காத்திருந்தார்கள். ஸ்மித் விகிள்ஸ்வொர்த் வந்ததும், அழுது கொண்டிருந்தவர்களை எல்லாம் வெளியே போகும்படி செய்து, மனைவியின் பிரேதத்தண்டை சென்று, மனைவியின் கைகளைப் பிடித்து, தூக்கி விட்டார். மனைவி உயிரோடு எழுந்தார்கள்.

அதைப்போல, கொரியாவின் போதகராகிய பால் யாங்கி சோவின் மகன் மரித்தபோது உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார். காரணம் மரணத்தை அவர் ஏற்றுக் கொள்ளாமல், விசுவாசத்தோடு ஏறக்குறைய நான்கு மணிநேரம் போராடி ஜெபித்த ஜெபமே அது. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறீர்களா? “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன், என்றென்றும் மரியாமலும் இருப்பான்.”

நினைவிற்கு:- “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபே. 2:1).