விசுவாசத்தின் பரீட்சை!

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது, பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து” (யாக். 1:3).

பள்ளிக்கூடத்திலேயும், கல்லூரிகளிலேயும்தான், பரீட்சை இருக்கும் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. ஆவிக்குரிய ஜீவியத்திலும், உங்களுக்கு பரீட்சை உண்டு. அதுதான் விசுவாசப் பரீட்சை. எவ்வளவுக்கெவ்வளவு விசுவாசப் பரீட்சையின் வழியாக செல்லுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய விசுவாசமும் உறுதிப்படும். நீங்களும் விசுவாசத்தில் வல்லமையுள்ளவர்களாய் மாறுவீர்கள்.

ஆபிரகாமின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. அவர் விசுவாசத்தில் வல்லவரானார். யோபுவின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய விசுவாசிகள், விசுவாச பரீட்சைக்குச் செல்ல விரும்புவதில்லை. கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொள்வதில் மட்டும் இருந்து விடுகிறார்கள். தாவீதின் சாட்சி என்ன? “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே, அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே. 15:16).

வார்த்தைகளை உட்கொள்ளுங்கள். அவைகளை செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா? ஒருவன் ஏராளமாய்ச் சாப்பிட்டுவிட்டு, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் போனால், நாளடைவில் அவனுடைய சரீரம் பெருத்துப் பாரச்சுமையாகிவிடும். அதைப் போல, உங்களுடைய விசுவாசத்திற்கு உடற்பயிற்சி கொடுக்காவிட்டால், உங்கள் விசுவாச தசைகள், பலனற்று போய்விடும்.

தமிழ்நாட்டிலுள்ள கிறிஸ்தவ சபைகளில் பெரும் பகுதியினர், விசுவாசத்தைச் செயல்படுத்தக் கற்றுக் கொடுப்பதில்லை. விசுவாசிகளுடைய ஒரே கடமை, மணிக்கணக்காக பிரசங்கங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பதாகும். பிரியாணி சாப்பிட்டுச் சாப்பிட்டு செரிமானமாகாமல், மந்தமாக இருப்பதுபோல, இன்று விசுவாசிகளை ஆன்மீக நோய் பிடித்திருக்கிறது. பிரசங்கங்களைக் கேட்டுக் கேட்டு, ஊழியர்களுக்கு மார்க் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்களைக் கர்த்தர் கொடுத்திருந்தும், ஜனங்கள் அவைகளை ஏட்டுச்சுரக்காயாகவே வைத்திருக்கிறதினாலே, வாழ்க்கையிலே தோல்வியுள்ளவர்களாய் காணப்படுகிறார்கள். போராட்ட நேரங்களில், சாத்தானை எப்படி எதிர்த்து நிற்பது என்று தெரியவில்லை. பிரச்சனை நேரங்களில், எப்படி விசுவாச வார்த்தைகளை அறிக்கைச் செய்ய வேண்டும் என்பதை, அறியவில்லை.

தேவபிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தை அப்பியாசப்படுத்தாவிட்டால், உங்கள் விசுவாசம் ஒன்றுக்கும் உதவாமல், துருப்பிடித்து போய்விடும். விசுவாசத்தை செயல்முறைக்குக் கொண்டு வாருங்கள். வேத வசனங்களைப் பேசுங்கள். வாக்குத் தத்தங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். விசுவாசத்தில் முன்னேறிச் செல்லுங்கள்.

இந்தியாவின் வடகிழக்கு வட்டாரத்தில் மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம், மிஸோராம், திரிபுரா, அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்கள் இருக்கின்றன. 1896-ம் ஆண்டு மிஷனெரிகள் விசுவாசத்தோடும், கல்வாரி அன்போடும், இந்த ஜனங் களை அணுகினார்கள். அவர்களுக்குள் விசுவாச வித்துக்களை ஊன்றியபோது, அந்த மக்கள் விசுவாசத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் இருண்டு கிடந்த அப்பிரதேசம், இன்று வெளிச்சமாக மாறி இருக்கிறது. இன்று நாகலாந்திலே 98% விசுவாசிகள் இருக்கிறார்கள். இந்த மாகாணத்தில் தான் இந்தியாவிலேயே கிறிஸ்தவர்கள் அதிகம். இது விசுவாசத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி அல்லவா?

நினைவிற்கு:- “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற். 9:23).