விசுவாசியாயிரு!

“அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” (யோவா. 20:27).

தேவனுடைய எதிர்பார்ப்பு, ஆலோசனை, கட்டளை எல்லாம், “நீங்கள் அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இருக்க வேண்டும்” என்பதே. விசுவாசத்தை உங்களிடத்தில் உருவாக்குவதற்காகவே, வேதத்தில் ஏராளமான அற்புதங்களையும், அடையாளங்களையும் கர்த்தர் எழுதி வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையிலும், அநேக நன்மைகளைச் செய்து, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார்.

கிறிஸ்துவின் சீஷனாயிருந்த தோமா, கிறிஸ்துவோடுகூட மூன்று ஆண்டுகளாக நெருங்கி ஜீவித்தும், அநேக அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டும், கிறிஸ்துவை விசுவாசியாத, அவிசுவாசியாய் இருந்தார். ஆகவே, கர்த்தர் அவரை விசுவாசியாய் உருவாக்குவதற்காக, தனது காயப்பட்ட கரத்தையும் விலாவையும் காண்பிக்க வேண்டியதாயிற்று. “தோமாவே, நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்றார் (யோவா. 20:27).

விசுவாசமானது, ஒரு உருவாக்கும் சக்தியாகும். ஆனால் அவிசுவாசமோ, அழிவின் சக்தி. அவிசுவாசம் தேவனை மட்டுப்படுத்துகிறது. அவிசுவாசத்தினாலே கர்த்தர் விடுதலையோடு கிரியை செய்வது தடைப்படுகிறது. வேதம் சொல்லுகிறது: “அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம், அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை” (மத். 13:58).

நம் தேவன், ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறவர். அதற்காகவே அவர் பூமிக்கு இறங்கி வந்தார். ஆனால் ஜனங்கள் அவரை அவிசுவாசித்தபோது, அந்த அவிசுவாசம், அவருடைய கைகளைக் கட்டிப்போட்டது. அவர்கள் அவிசுவாசமாய், “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா?” என்றெல்லாம் சொல்லி, அவரை மட்டுப்படுத்தினார்கள்.

பல வேளைகளில் சீஷர்களுடைய அவிசுவாசத்தினால், பிசாசுகளைத் துரத்த முடியாமல் போயிற்று. ஏன் அதைத் துரத்திவிட எங்களால் கூடாமற்போயிற்று என்று அவர்கள் கேட்டபோது, இயேசு திட்டமாய் சொன்னார், “உங்கள் அவிசுவாசத்தினாலேதான்” (மத். 17:19,20). “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன், அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6).

அவிசுவாசம், ஒரு முட்டுக்கட்டை. தேவனை மட்டுப்படுத்தும், தடைக்கல். ஆகவே அவிசுவாசத்தை முற்றிலும் அகற்றிப்போட்டு, உங்களை விசுவாசத்தினாலும், தேவனுடைய வசனத்தினாலும் நிரப்புங்கள். யாக்கோபு எழுதுகிறார், “எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப் படுகிறவன் காற்றினால் அடிபட்டு, அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக” (யாக். 1:6,7).

தேவனை முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், நீங்கள் விசுவாசித்தால், உங்கள் ஒவ்வொரு ஜெபத்துக்கும் பலன் கிடைக்கும். நீங்கள் விசுவாசித்தால், உங்களுக்காக ஜீவனைக் கொடுத்தவர், உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். நீங்கள் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள் (யோவா. 11:40).

நினைவிற்கு:- “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணா திருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (யோவா. 20:29).