விசுவாசிக்கிறவன் பதறான்!

“விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16).

விசுவாசிக்கிறவன், எந்த சூழ்நிலையிலும் பதறுவதுமில்லை, கலங்குவதுமில்லை, நடுங்குவதுமில்லை. ஏனென்றால், அவன் முற்றிலும் கிறிஸ்துவில் சார்ந்து கொள்ளுகிறவனாய் இருக்கிறான்.

சமீபத்தில், ஒரு லாரியின் பின் பாகத்தில் ஒரு வார்த்தை எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அது என்ன தெரியுமா? “பதறினால் சிதறி விடுவாய்” என்பதே. லாரி ஓட்டுகிற ஒவ்வொருவருக்கும், அவரவருடைய திறமையிலே நம்பிக்கையும், விசுவாசமும் இருக்க வேண்டும். எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலையிலும், நிதானம் தவறி பதறிவிட்டால், விபத்துதான் நேரிடும்.

உங்களுக்கு, உங்கள் மேலேயே ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும். மட்டுமல்ல, கர்த்தர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்கிற, அசைக்க முடியாத விசுவாசமும் இருக்க வேண்டும். எந்த ஒரு மனுஷன், கர்த்தரில் பூரணமாக சார்ந்துகொள்ளுகிறானோ, அவன் ஒருபோதும் பதறுவதில்லை. இன்று மனிதனை பதற வைத்து, கலங்கச் செய்யக்கூடிய அநேக சூழ்நிலைகள் உருவாகின்றன. சத்துருவானவன் எதிர்பாராத தோல்விகள், எதிர்பாராத விபத்துக்கள், நோய்கள், போராட்டங்களைக் கொண்டு வந்து, விசுவாசிகளின் உள்ளத்தில் கலக்கத்தைக் கொண்டு வருகிறான்.

வியாபாரம் தோல்வி அடையும்போது, குடும்ப உறவுகள் சிதறும்போது, கண்கள் கலங்குகிறது. இருதயங்கள் வேதனைப்படுகிறது. ஆனாலும் நீங்கள் மனம் பதறிவிடக் கூடாது. கர்த்தரில் சார்ந்து, உங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்யும்போது, உங்கள் உள்ளம் திடன்கொள்ளுகிறது. பலர் இந்த இரகசியத்தை அறிவதேயில்லை.

ஒருநாள் மோசே பதறினார். ஜனங்கள் மோசேக்கு விரோதமாகவும், கர்த்தருக்கு விரோதமாகவும் முறுமுறுத்து வாக்குவாதம் செய்தபோது, மோசேக்குள்ளும் ஒரு பதட்டம் வந்தது. கன்மலையோடு பேசும்படி கட்டளை பெற்ற அவர், பதறிப்போய்க் கன்மலையை அடித்துவிட்டார். “இந்தக் கன்மலையிலிருந்து, கர்த்தர் தண்ணீரை புறப்படச் செய்வாரோ?” என்று மனம் பதறி, அவிசுவாச வார்த்தைகளைப் பேசிவிட்டார். ஆண்டவருடைய உள்ளம் ஆழமாகப் புண்பட்டது. இதன் விளைவாக மோசேயினால், கானானுக்குள் பிரவேசிக்க முடியவில்லை.

பேதுரு, அன்றைக்கு மனம் பதறினார். பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, வேலைக்காரிகளில் ஒருத்தி, “இயேசுவோடு இருந்தவர்களில், நீயும் ஒருவன் அல்லவா?” என்று கேட்டபோது, அந்தக் கேள்வி அவரை மனம் பதறச் செய்தது. என்ன செய்கிறோம் என்று அறியாமல், கிறிஸ்துவை சபிக்கவும், சத்தியம் பண்ணவும், ஆரம்பித்துவிட்டார். முடிவில் அவர் மனம் கசந்து, அழ வேண்டியதாயிற்று. மனம் பதறுவதினால், ஏற்படும் விளைவுகள் வேதனையானது! அது நிரந்தரமான தழும்புகளை, உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடியது! விசுவாசிக்கிறவன் பதறான்.

கோதுமை மணியோடு, பதறும் கலந்திருக்கிறது. ஆனாலும் அதைத் தூற்றும் போது, காற்றிலே பறந்து சென்று விடும். கோதுமை மணியோ, காற்றினால் அசையாதபடி, உறுதியாய் நிற்கும். தேவபிள்ளைகளே, நீங்கள் பதறு அல்ல. ஆகவே பதறாதீர்கள். நீங்கள் கோதுமை மணி அல்லவா? விசுவாசிக்கிறவன் பதறான்.

கன்மலையில் வீட்டைக் கட்டுகிறவன், பதறுவதில்லை. தேவபிள்ளைகளே, கன்மலையாகிய கிறிஸ்துவில் நீங்கள் அஸ்திபாரம் போட்டிருப்பீர்கள் என்றால், ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

நினைவிற்கு:- “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” (யோவா. 14:1).