விசுவாசத்தினால் ஜெயம்!

“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவா. 5:4).

“விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்” உலகத்தை ஜெயிக்கும்படியாக நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், உலகத்திற்குரியவர்கள் அல்ல. நீங்கள் கர்த்தருடையவர்கள். நீங்கள் அந்நியரும் பரதேசிகளுமாய், இந்த உலகத்தை வெற்றியோடு கடந்து செல்லுகிறீர்கள்.

மட்டுமல்ல, நீங்கள் இந்த உலகத்தில் இருந்தாலும், உலகத்தில் இருப்பவனிலும் உங்களில் இருப்பவர் பெரியவராயிருக்கிறார் (1 யோவா. 4:4). தேவன் வல்லவர், நல்லவர், உங்கள்மீது அன்புடையவர். உங்கள் ஓட்டத்தை ஜெயமாய் முடியப் பண்ணுகிறவர். இந்த உலகத்தில் இருப்பவன் யார்? அவன்தான் சாத்தான். அவன் இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் என்று வேதம் அழைக்கிறது (2 கொரி. 4:4).

அவன் மூலமாய் கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்பவைகள் உங்களோடுகூட போராடுகின்றன. இந்தப் போராட்டத்தில் நீங்கள் வெற்றி காண வேண்டாமா? லௌகீகத்தை ஜெயிக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு விசுவாசம் தேவை. அந்தகார வல்லமைகளோடும், வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் போரிட்டு, ஜெயம் காண வேண்டாமா? இதற்கும் உங்களுக்கு விசுவாசம் தேவை. உங்களுடைய விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

உங்களுக்கு எப்படிப்பட்ட விசுவாசம் தேவை? கிறிஸ்து, ஜெயவேந்தர், அவர் ஒருநாளும் தோல்வியடையமாட்டார், என்கிற விசுவாசம். அவர் பெரியவர், வல்லவர் என்கிற விசுவாசம். சாத்தானின் தலையை நசுக்கினவர், சாபத்தின் கூரை முறித்தவர், பாவத்திலிருந்து ஜெயம் தருகிறவர் என்ற விசுவாசம். மட்டுமல்ல, சாத்தான் கொண்டு வருகிற வியாதிகளைக் குணமாக்க தழும்புகளை ஏற்றுக் கொண்டவர் என்கிற விசுவாசம். வல்லமையுள்ள தேவனை, நீங்கள் நோக்கிப் பார்க்கும்போதெல்லாம், உங்களுக்குள் விசுவாசம், ஆறாய் சுரந்து வருகிறது.

ஒருபோதும் போராட்டத்தைப் பாராதிருங்கள். பிரச்சனைகளைக் கொண்டு வருகிற சாத்தானைப் பாராதிருங்கள். போராட்டத்தின் வலிமையைக் குறித்து எண்ணிக் கொண்டிராதிருங்கள். கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவரை மகிமையுள்ளவராக, மகத்துவமுள்ளவராய் நோக்கிப் பாருங்கள்.

தாவீது கோலியாத்தை நோக்கிப் பார்க்கவில்லை. இஸ்ரவேலின் இராணுவங்களின் தேவனையே நோக்கிப் பார்த்தார். ஆகவே, “கர்த்தருடைய நாமத்தில் வருகிறேன்” என்று அவரால் வெற்றி நடைபோட முடிந்தது. கோலியாத்தை கல்லினால் அடித்து வீழ்த்த முடிந்தது. தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும் உங்கள் விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கும் ஜெயமாக இருக்கிறது. துயரமான சூழ்நிலைகளா? மனச்சோர்வுகளா? கலக்கங்களா? அதைரியப்படாதீர்கள்!

உங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிறவர், ஜீவனுள்ளவராயிருக்கிறார். ஆகவே, அப்.பவுலோடு சேர்ந்து, “நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று, சொல்லி வெற்றி முழக்கமிடுவீர்களாக. கிறிஸ்து, ஒருபோதும் தோல்வி அடைந்தவர் அல்ல. ஆகவே நீங்கள் தோல்வியடையப் போவதில்லை. கர்த்தர் உங்கள் தோல்விகளை ஜெயமாய் மாறப்பண்ணுவார். உங்கள் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றுவார். உங்கள் கண்ணீரை ஆனந்தக் களிப்பாய் மாற்றுவார். நீங்கள் ஜெயங்கொள்ளும்படியாய் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நினைவிற்கு:- “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக” (கொலோ. 3:16).