விசுவாசமும், தெய்வீக சுகமும்!

“விசுவாசமுள்ள ஜெபம், பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்” (யாக். 5:15).

விசுவாசத்தின் முதற்படி, இரட்சிப்பு, இரண்டாம்படி, ஞானஸ்நானம், மூன்றாம் படி, அபிஷேகம், நான்காம்படி, தெய்வீக சுகமாகும். கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், விசுவாசம் இணைந்திருக்கிறது. விசுவாசமில்லாமல், தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை, நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.

வியாதி தேவனிடத்திலிருந்து வருவதில்லை. கர்த்தருடைய பிள்ளைகள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கும்படி தேவன் விரும்புகிறார். ஆனால் வஞ்சக சாத்தானோ, வியாதிகளையும், நோய்களையும், பலவீனங்களையும் கொண்டு வருகிறான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி, வேறொன்றுக்கும் வரான் (யோவா. 10:10).

கிறிஸ்து ஜீவனைக் கொடுக்கவும், அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்தார். நீங்கள் கிறிஸ்துவின் ஜீவனுள்ளவர்களாய், ஆரோக்கியமுள்ளவர்களாய் இருக்க வேண்டும், என்பதற்காக, அவர் உங்களுடைய நோய்களை எல்லாம் குணமாக்குகிறார். “இயேசு என்னைச் சுகப்படுத்துவார்” என்று விசுவாசித்து, நீங்கள் ஜெபிக்கும்போது, விசுவாசமுள்ள ஜெபம், பிணியாளியை குணமாக்குகிறது.

உங்களுடைய வியாதிகள் நீங்கி குணமாக நீங்கள், “இயேசு என் பாவப் பரிகாரி மட்டுமல்ல, சரீரத்திற்கும் பரிகாரி” என்பதை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நோய்களைக் குணமாக்குவேன். எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் வரப்பண்ணேன். “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்று அவர் வாக்களித்திருக்கிறார் (யாத். 15:26). வாக்களித்து, நோய்களை சிலுவையில் சுமந்து தீர்த்திருக்கிறார்.

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத். 8:17). “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:4,5). நீங்கள் விசுவாசத்தோடு, உங்களுக்காக தழும்புகளை ஏற்றுக்கொண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர் நிச்சயமாகவே, உங்களுக்கு பூரண ஆரோக்கியத்தை தந்தருளுவார்.

ஒரு முறை அப்.பவுல், லீஸ்திராவிலே வந்தபோது, அங்கே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல், சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் விளங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, “நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்துநில்” என்று உரத்த சத்தத்தோடே சொன்னார். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான் (அப். 14:8-10).

பாருங்கள், அவனுக்குள் விசுவாசம் இருக்கிறது என்று தேவ ஊழியர் கண்டார். அந்த விசுவாசத்தின் மூலமாய் குணமானான். விசுவாசமே, தெய்வீக சுகத்தைக் கொண்டு வருகிறது. அப்படியே பிறவிச் சப்பாணியை பேதுரு எழும்பி நடக்கப் பண்ணினபோது, எல்லோருக்கு முன்பாக சொன்னார். “விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது” (அப். 3:16). தேவபிள்ளைகளே, விசுவாசித்து, அற்புதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவா. 1:1).