விசுவாசத்தினால் அபிஷேகம்!

“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்” (யோவா. 7:38,39).

விசுவாசத்தினாலே, இரட்சிக்கப்படுகிறோம். விசுவாசத்தினாலே, ஞானஸ்நானம் பெறுகிறோம், விசுவாசத்தின் மூன்றாவது படி, அபிஷேகமாகும். கிறிஸ்து அபிஷேக நாதர் ஆனபடியால், என்னை நிச்சயமாகவே அபிஷேகம் பண்ணுவார் என்ற விசுவாசத்தோடும், தாகத்தோடும் காத்திருக்கும்போது, கர்த்தர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உங்களுக்குத் தந்தருளுவார்.

தேவன் ஆவியாயிருக்கிறார். அந்த ஆவியானவர் உங்களுக்குள் வருவார், உணர்த்துவார், நடத்துவார், போதிப்பார், தேற்றுவார், சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துவார் என்பதை எல்லாம் விசுவாசியுங்கள். அப்போது ஜீவத்தண்ணீருள்ள நதியான ஆவியானவர், உங்களுக்குள் கடந்து வருவார்.

“நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று அப். பவுல் கேட்கிறார் (அப். 19:2). அன்றைக்கு எபேசு விசுவாசிகளினிடத்தில் அவர் கேட்டபோது, அவர்கள் பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். பவுல், அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள் (அப். 19:2,6).

அநேகர், தாங்கள் இரட்சிக்கப்பட்டவுடனே, அபிஷேகத்தைப் பெற்றுவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், பவுல் அப்போஸ்தலன் எபேசு விசுவாசிகளைப் பார்த்து, “பரிசுத்த ஆவியை பெற்றுவிட்டீர்களா?” என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தேவபிள்ளைகளே, உங்களை தாழ்த்தி கர்த்தரிடத்தில் தாகத்தோடு கேட்கும்போது, அவர் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணிய, பரிசுத்த ஆவியானவரைத் தந்தருளுவார்.

அன்புள்ள தகப்பன், தான் வாக்களித்ததை நிறைவேற்றுகிறார். சகல நன்மையான ஈவுகளையும் தம் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியோடு தருகிறார். இயேசு சொன்னார்: “நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது, அதிக நிச்சயம் அல்லவா?” (மத். 7:11). “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம்” (லூக். 11:13). பரிசுத்த ஆவியைப் பெறும்படி உங்கள் இருதயத்தை சுத்தப்படுத்துங்கள்.

அழுக்கடைந்து, சேறும், சகதியும் நிறைந்த பாத்திரத்தில், யாரும் தூய்மையான பாலை வார்க்க மாட்டார்கள். முதலாவது அந்தப் பாத்திரத்தை, அரப்புத்தூள் போட்டு நன்றாகச் சுத்திகரிப்பார்கள், தண்ணீரில் கழுவுவார்கள். பிறகு அந்த பாத்திரத்தில் பாலை வார்ப்பார்கள். அதைப் போலவே, விசுவாசத்தோடு உங்களுடைய உள்ளமாகிய பாத்திரத்தைச் சுத்திகரித்து, தேவசமுகத்தில் தாகத்தோடு கேட்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளுவார்.

வாக்குத்தத்தமானது, உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது (அப். 2:39).

நினைவிற்கு:- “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசா. 44:3).