விருத்தி செய்வார்!

“என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்” (நீதி. 9:11).

கர்த்தரே, உங்களுடைய ஆயுசை விருத்தியாக்குகிறவர். நாட்களைப் பெருகச்செய்கிறவர். உங்களுடைய சுவாசத்தை தம்முடைய கரத்தில் வைத்திருக்கிறார். உங்களுடைய ஒவ்வொரு இருதயத்துடிப்பும், அவருடைய கிருபையே. உங்களுடைய ஆயுசை நீடித்திருக்கப் பண்ணுகிறவரும், உங்களை தமது தழும்புகளால் குணமாக்குகிறவரும், அவரே!

நோவாவின் காலம் வரை, ஜனங்கள் எண்ணூறு வருஷம், தொளாயிரம் வருஷம் என்று உயிர் வாழ்ந்தார்கள். ஆதாமின் ஆயுசு, தொளாயிரத்து முப்பது, சேத்துடைய ஆயுசு தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷங்கள். ஏனோக்குடைய வருஷம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷங்கள். மிக நீண்ட நாள் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷங்கள்.

ஆனால் பூமியிலே பாவம் பெருகினபோது, கர்த்தர் மனுஷனுடைய ஆயுசு நாளைக் குறைத்தார். “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்” (ஆதி. 6:3). மோசே பக்தன் இதைக் குறித்து சொல்லும்போது, “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும், சஞ்சலமுமே” என்று குறிப்பிடுகிறார் (சங். 90:10). மனுஷர், காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (சங்.90:5).

ஆனால் கர்த்தராலே உங்களுடைய நாட்கள் பெருகும். உங்களுடைய ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்த கர்த்தர் சொன்னார், “நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர் வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்” (ஆதி. 15:15). ஆபிரகாம் மரிக்கும்போது, அவருடைய வயது நூற்று எழுபத்தைந்து ஆகும். “நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்” (நீதி. 16:31). கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுசைக் கட்டளையிடுவாராக!

எசேக்கியா ராஜாவுக்கு, கடுமையான வியாதி வந்தது. அது, “ராஜபிளவை” என்கிற வியாதி என்று வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். “நீர் மரித்துப்போவீர் உம்முடைய வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்” என்றார் ஏசாயா (ஏசா. 38:1).

அப்பொழுது எசேக்கியா ராஜா, தன் முகத்தை சுவர்ப்பக்கமாத் திருப்பிக் கொண்டு, மிகவும் அழுது, விண்ணப்பம் பண்ணினார். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டார். “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்” என்று வாக்களித்தார் (ஏசா. 38:5). அப்படியே, ஆயுசு நாட்களை நீடித்துக் கொடுத்தார்.

வியாதிப்பட்டு போனீர்களோ? பெலவீனமடைந்து போனீர்களோ? டாக்டர்கள் கைவிட்டார்களோ? கர்த்தரை நோக்கிப் பாருங்கள். உங்கள் குறைகளையும், பாவங்களையும் அறிக்கையிட்டு, உங்களைத் தாழ்த்தி மன்றாடுங்கள். “என்னாலே உன் வருஷங்கள் விருத்தியாகும்” என்று சொன்ன கர்த்தர், நிச்சயமாகவே உங்களுடைய ஆயுசு நாளை நீடிக்கப்பண்ணுவார்.

நினைவிற்கு:- “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரை வயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனி மேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா. 46:4).