கர்த்தரை அறிகிற அறிவு!

“ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு. பரிசுத்தரின் அறிவே அறிவு” (நீதி. 9:9,10).

கர்த்தரை அறிகிற அறிவு, உங்களுடைய உள்ளத்தை மகிழ்ந்து பூரிக்கச்செய்யும். ஏனென்றால், எல்லா அறிவுக்கும் ஆரம்பமும், உறைவிடமுமாக இருப்பது, கர்த்தர்தான். அவரைப் பற்றி அறிகிற அறிவு, அளவிடப்பட முடியாதது. கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற முதல் அறிவு, அவரைப் பற்றிய அறிவேயாகும். அந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்ற அறிவுகள் தானாய் வரும்.

ஒரு சிறு குழந்தை, முதலாவது தன் தாயை அறிகிறது. தன்னுடைய தேவை எதுவானாலும், தன் தாயையே நோக்கிப் பார்க்கிறது. தாயை அறிந்த பின்னரே, தன் தகப்பனையும், மற்றவர்களையும் அது அறிய ஆரம்பிக்கிறது. பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, பாடப்புத்தகங்களின் அறிவை அறிகிறது. அறிவிலிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொண்டபின்பு, உலகத்தில் வாழ கற்றுக்கொள்ளுகிறது. ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாயிருக்கிற நமக்கு, ஆவிக்குரிய தாயும், தகப்பனு மாயிருப்பவர் கர்த்தர் ஒருவரே. அவரை அறிகிற அறிவே, சிறந்த அறிவு.

கர்த்தரை அறிகிற அறிவிலே, உங்களுடைய மனதை செலுத்தும்போது, “இன்னும் அவரை அறிய வேண்டுமே, இன்னும் நெருங்கி கிட்டிச் சேர வேண்டுமே” என்ற ஏக்கம் உண்டாகும். அப்பொழுது நீங்கள் அவருடைய சுபாவத்தையும், குணாதிசயங்களையும் உணர்ந்துகொள்ளுவீர்கள். அவர் எவற்றில் பிரியமாயிருக்கிறார்? அவர் சித்தம் என்ன? என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.

அப்.பவுல், வாழ்க்கையின் ஏக்கமெல்லாம், கர்த்தரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதாகவேயிருந்தது. “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக, எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இப்படி நான் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி. 3:8,10,11).

கிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல், அப்.பவுலுக்குள்ளே அனல் கொண்டு எழுந்ததினால், அவர் தனிமையாக அரபுதேசத்துக்குப் போய், ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் உபவாசித்தும், ஜெபித்தும் கிறிஸ்துவைப் பற்றிய பல அறிவுகளையும், அநேக தேவனுடைய இரகசியங்களையும் அறிந்துகொண்டார். முடிவில் “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோத். 1:12) என்று எழுதுகிறார்.

“இனிப்பு எப்படியிருக்கும்?” என்று ஆயிரம் பக்கங்கள் ஒரு பெரிய புத்தகமாக எழுதினாலும், அதை வாசித்து, இனிப்பு என்பது என்ன? என்று அறிய முடியாது. கொஞ்சம் சர்க்கரை வாயிலே போட்டால், அல்லது தேனை ஊற்றிக் குடித்தால், அதன் இனிமை சுவையை அறிந்துகொள்ள முடியும். தேவபிள்ளைகளே, அதுபோல கர்த்தருடைய சுபாவங்களையும், குணாதிசயங்களையும் ருசித்துப் பாருங்கள். “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 34:8). கர்த்தரை அறிகிற அறிவுக்காக வாஞ்சிப்பீர்களா?

நினைவிற்கு:- “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஆபகூக். 2:14).