ஞானத்தின் வழிமுறை!

“பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ள வனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்” (நீதி. 9:8).

காலங்கள் செல்லச் செல்ல, மனுஷருடைய உள்ளங்கள் முரட்டாட்டமாய் மாறுகின்றன. யாரும் புத்தியையும், ஆலோசனையையும் பெற விரும்புவதில்லை. “எனக்கெல்லாம் தெரியும், யாரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. என் எதிர்காலத்தை நானே வகுத்துக்கொள்வேன்” என்கிறார்கள். பள்ளிக்கூடத்து மாணவர்களை கடிந்துகொள்ள முடியாது. பிரம்பை எடுத்து அவர்கள் புத்தியீனத்தை அகற்ற முடியாது. உடனே ஊர் மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள்.

சென்னையிலுள்ள ஒரு கல்லூரி பேராசிரியை துக்கத்தோடு சொன்னார், “கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே, மாணவர்களுக்குள்ளிருந்த சன்மார்க்க நெறி முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது. கல்லூரிக்கு வந்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே ஆணும், பெண்ணுமாக ஜோடி சேர்ந்து விடுகிறார்கள். ஒரு மணி நேரம்தான் வகுப்பில் இருப்பார்கள். பிறகு சிற்றின்பத்தை அனுபவிக்கப் புறப்பட்டு விடுவார்கள். அவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களை பாஸ் பண்ணி போட்டால் தான், கல்லூரிக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்கிறார்கள்.

சாலொமோன் ஞானி சொல்லுகிறார், “பரியாசக்காரனைக் கடிந்து கொள்ளாதே, ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். பக்தியுள்ள பெற்றோர்களிடம் வளர்ந்த பிள்ளைகள், புத்திமதியையும், ஆலோசனையையும், மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுவார்கள். தாவீது ராஜா, தன்னைத் தாழ்த்தி எழுதுகிறார், “நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும், என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை” (சங். 141:5).

அதுபோல நீங்களும், உங்கள் பெற்றோருடைய ஆலோசனைகளுக்கும், வழி நடத்துதல்களுக்கும், உங்களை ஒப்புக்கொடுங்கள். “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்” (நீதி. 10:1). உண்மையாகவே இளம் வயதிலும், வாலிபப் பிராயத்திலும், என் தகப்பனார் எனக்குக் கொடுத்தக் கண்டிப்புகளும், ஞான அறிவுரைகளும், இன்றைக்கும் எனக்குப் பயனுள்ளவைகளாய் இருக்கின்றன. என் தகப்பனை நினைக்கும்போதெல்லாம், சந்தோஷமாய் என் இருதயம், மனம் மகிழுகிறது.

ஞானமுள்ள பிள்ளைகள், தங்கள் பெற்றோரை கனப்படுத்துகிறார்கள், மேன்மை படுத்துகிறார்கள். அதன்மூலம் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபே. 6:2,3)

“நான் குழந்தையாய் இருந்தபோது, என் தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்த்தியிருந்திருப்பார்களோ? என்னுடைய சுகவீன நேரத்தில் இரவு, பகல் தூங்காமல், கண் விழித்துப் பார்த்திருப்பார்களோ?” என்று யாரும் எண்ணுவதில்லை. ஆனால் அவர்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகளை பெற்றெடுத்தபோதுதான், அவர்களுடைய பெற்றோர் எவ்வளவு பாசத்தோடு, தங்களுடைய சுகநலன்களை தியாகம் செய்து, தங்களை வளர்த்தார்கள் என்பது புரியும். தேவபிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருடைய ஆசீர்வாதத்திற்கு இணையான ஆசீர்வாதம் உலகத்தில் வேறு ஒன்றுமில்லை. ஆகவே, பெற்றோரை நேசித்து, கனம் பண்ணுங்கள்.

நினைவிற்கு:- “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” (நீதி. 27:11).