ஞானத்தின் வீடு!

“ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்து வைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி” (நீதி. 9:1,2).

நீதிமொழிகளின் புஸ்தகத்தில், ஞானத்தை பெண்ணுக்கு உவமைப்படுத்தி சொல்லியிருக்கிறது. ஞானம் தன் வீட்டைக் கட்டுகிறாள் (நீதி. 9:1). “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்” (நீதி. 14:1). அந்த வீடு என்ன? அதுவே தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆலய வாழ்க்கை. மட்டுமல்ல, அது நித்திய வாழ்க்கை. நீங்கள் பூமியிலே வாழுகிற வாழ்க்கைதான், இந்த நான்கு வகையான வீடுகளையும் கட்டி எழுப்புகிறது.

உங்களுக்கும்கூட கர்த்தரே வீட்டைக் கட்டித் தருவார். உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையான ஆலயத்தை, நீங்கள் கர்த்தருக்கென்று பரிசுத்தமுள்ள வாசஸ்தலமாக் கட்டி எழுப்ப நினைக்கும்போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டுவார். “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” (சங். 127:1). கட்டின வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியோடும், சமாதானத்தோடும் கூட வாழ்வது தேவனுடைய அநுக்கிரகம்தான் (பிர. 5:19).

மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப் பாருங்கள். “ஞானம் தன் வீட்டைக் கட்டி அதின் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து” என்று “ஏழு தூண்களைக் குறித்து” இங்கே பேசப்பட்டிருக்கிறது. “ஏழு” என்ற வார்த்தை, “பூரணத்தை” குறிக்கிறது. ஒரு வீட்டைக் கட்டும்போது, நீங்கள் பூரணமாய் கட்டி முடிக்க வேண்டும். அப்படி கட்டி முடிப்பதற்கு, உறுதியான வல்லமையான ஏழு தூண்கள் அவசியம். அந்த தூண்கள்தான் அந்தக் கட்டிடம் நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது.

நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம், தனித்து ஜெபிப்பதற்கு, ஒரு ஆலயத்திற்கு செல்வது உண்டு. அதின் வெளி வாசலிலே மிக கெம்பீரமான உயரமான தூண்களைச் சந்திப்பேன். அந்தத் தூண்களைப் பார்க்கும்போதெல்லாம், அவை ஆண்டவருடைய மகத்துவங்களையும், மேன்மையையும், எனக்கு நினைவுபடுத்தும். அந்த பெரிய பலமிக்க தூண்கள், அந்த ஆலயத்தைத் தாங்கி நிற்கின்றன. அன்றைக்கு யாக்கோபு, ஒரு பெரிய கல்லை எடுத்து தூணாக நிறுத்தினார். நான் தூணாக நிறுத்தின இந்தக் கல், தேவனுக்கு வீடாகும் என்று சொன்னார் (ஆதி. 28:22).

அப்.பவுல் எழுதுகிறார். “தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாச் சத்தியத்துக்குத் தூணும், ஆதாரமுமாயிருக்கிறது” (1 தீமோ. 3:15). சரி, ஞானம் கட்டுகிற அந்த வீட்டிலுள்ள ஏழு தூண்கள் என்ன? ஏழு ஞான உபதேசங்கள் என்ன? அவையாவன: 1. தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கை. 2. உத்தமம். 3. உதாரத்துவம். 4. உற்சாகமான கடின உழைப்பு. 5. விசுவாச வார்த்தைகள். 6. சிநேகிதம். 7. பரிசுத்தம்.

சிலர் இந்த ஏழு தூண்களையும், புதிய ஏற்பாட்டிலே கொடுக்கப்பட்டிருக்கிற ஏழு அஸ்திபார உபதேசங்களுக்கும் ஒப்பிட்டு கூறுகிறார்கள். இந்த செய்தியை நீங்கள் ஆவிக்குரிய உணவாக ஏற்றுக்கொள்ளுகிற அதே நேரத்தில்தானே, எப்படியாவது நேரம் செலவழித்து, நீதிமொழிகளின் புஸ்தகம் முழுவதையும் வாசிக்கும் படி கேட்டுக் கொள்ளுகிறேன். அப்பொழுது இன்னும் அதிகமான ஆவிக்குரிய வெளிப்பாடுகளையும், சத்தியங்களையும், நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

நினைவிற்கு:- “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை” (வெளி. 3:12).