வீட்டைக் காக்கும் ஞானம்!

“ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து” (நீதி. 9:1).

வேதத்தில் 66 புத்தகங்கள் உண்டு. அந்தப் புத்தகங்களிலே ஞானவான்களின் சரித்திரமும், ஆண்டவரை இனிதாய் துதிக்கும் சங்கீதங்களும் உண்டு. இயேசு கிறிஸ்து பூமியிலே இருந்தபோது, செய்த அற்புதமான கிரியைகள் உண்டு, பிரசங்கங்கள் உண்டு, பக்திவிருத்தியடையச் செய்யும் நிருபங்கள் உண்டு. முழு வேதாகமத்தையே, “ஞானத்தின் புத்தகம்” என்று அழைத்தாலும், அது பொருத்தமானதே. ஆனாலும் கூட, சாலொமோன் எழுதின நீதிமொழிகளும், பிரசங்கியின் புத்தகமும், உலக ஞானத்தையும், ஆவிக்குரிய ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

“ஞானம்” என்ற வார்த்தையை, ஏறக்குறைய 222 இடங்களிலே வேதப்புத்தகத்தில் நீங்கள் காணலாம். ஞானத்தின் மூலம், நீங்கள் இந்த உலகத்திலே வெற்றி வாழ்க்கை வாழ முடியும். அதே ஞானத்தின் மூலம், பரலோக ராஜ்யத்தையும் சுதந்தரித்துக்கொள்ள முடியும். உலகத்தாருக்கு அனுபவங்களினாலும், ஆலோசனைகளினாலும், புத்தகங்களினாலும் ஞானம் கிடைக்கிறது. ஆனால், உங்களுக்கோ, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், விசேஷித்த ஞானத்தை தருகிறார்.

ஞானம் தன் வீட்டைக் கட்டுகிறது (நீதி. 9:1). “வீடு, ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்” (நீதி. 24:3). உங்களுடைய குடும்ப வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், குடும்பத்தில் அன்பும், ஐக்கியமும், ஒருமனப்பாடும் இருக்க வேண்டும், அதற்கு நீங்கள் தேவ ஞானத்தால் நிறைந்திருக்க வேண்டியது அவசியம். எதைச் சொன்னாலும், செய்தாலும், அதை சிந்தித்துப் பார்த்து, செய்ய வேண்டும். இந்த ஞானக் குறைவினால், குடும்பங்கள் உடைக்கப்பட்டுப் போயிருக்கிறது. கசப்பும், மனவேதனையும் நிறைந்திருக்கிறது.

இரண்டாவதாக, சொல்லுகிறார்: “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” (நீதி. 14:1). மூன்றாவதாக, உங்களுடைய வீடு கட்டப்பட வேண்டுமென்றால், கர்த்தர் தாமே உங்களுக்கு, உங்களுடைய வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டும். “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா: கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” (சங். 127:1).

உண்மையாய், ஞானமுள்ள கணவனும், புத்தியுள்ள மனைவியும், கர்த்தரோடு இணைந்து, தங்களுடைய குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். தேவனுக்கு, “ஞானம்” என்ற ஒரு பெயர் உண்டு. “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:31). “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோம. 11:33).

ஞானக் குறைவினால், அநேகம் பெண்கள் புருஷன் மேல் சந்தேகப்பட்டு, குடும்பத்தை உடைத்திருக்கிறார்கள். மாமியாருக்கும், கணவனுக்குமிடையே கசப்பின் விதைகளை விதைத்து, வேதனையாக விளைவை சந்தித்திருக்கிறார்கள். கணவனும், பல வேளைகளில், ஞானமில்லாமல் நடந்து, சின்னச் சின்ன காரியத்திற்கும் எரிந்து விழுந்து, சண்டைபோட்டு குடும்பத்தைச் சிதைத்திருக்கிறார்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய குடும்பத்தைக் கட்டுவதற்கு உங்களுக்கு ஞானம், புத்தி, விவேகம் மிகவும் அவசியம். அப்படியானால், உங்களுடைய வீட்டிலே, தேவ பிரசன்னம் இருக்கும், மன நிறைவும், சந்தோஷமும் இருக்கும்.

நினைவிற்கு:- “இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்” (ஏசா. 52:13).