நித்தமும்!

“என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்” (நீதி. 8:34).

நித்தமும் நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை, கர்த்தர் தெளிவாக வலியுறுத்துகிறார். சரீர கடமைகளுமுண்டு, உலகப்பிரகாரமான கடமைகளுமுண்டு. அதே நேரத்தில் கர்த்தருக்குச் செய்யவேண்டிய கடமைகளுமுண்டு. ஆவிக்குரிய கடமைகளுமுண்டு. “என் வாசற்படியில் நித்தம் விழித்திருக்க வேண்டும். என் கதவு நிலையருகே காத்திருக்க வேண்டும். எனக்கு செவிகொடுக்க வேண்டும். அப்பொழுது பாக்கியவான்களாய் விளங்குவீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இஸ்ரவேலர், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே நடந்தபோது, கர்த்தர் நித்தமும் அவர்களுக்கு பரலோக மன்னாவை பொழிந்தருளினார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகள்மேல் எவ்வளவு அன்பும், அக்கரையும் உள்ளவராயிருக்கிறார்! அந்த மன்னா சாதாரணமானதல்ல. தேனிட்ட பணிகாரம் போலவும், ஒலிவ எண்ணெய் போலவும் ருசியுள்ளது. அது தேவதூதர்களின் உணவு. அதை உண்ணும்போது காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டானது. வியாதியோ, பெலவீனமோ, அணுகுவதில்லை.

இஸ்ரவேல் ஜனங்கள் நித்தமும், பாளயத்துக்கு வெளியிலே போய், தங்களுக்கு வேண்டிய அளவு, மன்னாவை ஒவ்வொருநாளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது நித்தமும் அவர்களுடைய கடமையாயிருந்தது (யாத். 16:4). அதுபோல, நீங்கள் நித்தமும், பரலோக மன்னாவாகிய வேத வசனத்தை தியானித்து, வாசிக்க வேண்டும். வாசித்தவைகளை நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும், நித்தமும் வேதம் வாசிக்க வேண்டும். நெகேமியாவின் நாட்களில் என்ன நேர்ந்தது? “முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது” (நெகே. 8:18). “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும், அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2,3).

மூன்றாவதாக, நித்தமும் ஜெபிக்கிறவர்களாயிருக்க வேண்டும். பரிசுத்தவான்கள் விழித்திருந்து, ஜெபித்தார்கள். ஜெபித்தபின்பு, விழிப்புள்ளவர்களாயிருந்தார்கள். தாவீதின் அனுபவம் என்ன? “கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்” (சங். 88:9). “தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (சங். 61:8).

தினமும் கர்த்தர் உங்களுக்கு செய்த நன்மைகளை, ஜனங்கள் மத்தியிலே விவரித்துப் பேசுங்கள். தினமும் கர்த்தரைக் குறித்து சாட்சி கொடுங்கள். தினமும் ஒரு ஆத்துமாவையாவது கர்த்தருக்கென்று ஆதாயப்படுத்த வேண்டுமென்ற வைராக்கியமுள்ளவர்களாயிருங்கள். சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் திருவசனத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ணுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசா. 58:11).