நித்தமும்!

“என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்” (நீதி. 8:34).

நித்தமும், நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. நித்தமும், வேதம் வாசிக்க வேண்டும். நித்தமும், ஜெபிக்க வேண்டும். நித்தமும், உங்களை ஜீவ பலியாக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். நித்தமும், கர்த்தருக்கு சாட்சியாய் அவரையே மகிமைப்படுத்த வேண்டும், துதிக்க வேண்டும்.

அதே நேரத்தில், நித்தமும் கர்த்தருடைய வாசற்படிக்குச் சென்று, அவருடைய கதவு நிலையருகே காத்திருந்து, அவருடைய ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு, அதற்குச் செவிகொடுக்க வேண்டும். அது உங்களை பாக்கியமான வாழ்க்கைக்கு வழி நடத்தும். கர்த்தர் ஒவ்வொரு நாளும் தம்முடைய ஆலோசனையையும், வழி நடத்துதலையும், உங்களுக்குத் தந்தருளுவார். அவருடைய சமுகத்திலே, நீங்கள் காத்திருக்கும்போது அவரது சித்தத்தை உங்களுக்கு நிச்சயமாகவே வெளிப்படுத்துவார்.

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்பது, அவருடைய வாக்குத்தத்தம் அல்லவா! (சங். 32:8). நம்முடைய ஆண்டவருடைய பெயர் “ஆலோசனைக் கர்த்தர்” (ஏசா. 9:6). அவர் “ஆலோசனையில் ஆச்சரியமானவர்” (ஏசா. 28:29). அவருடைய “ஆலோசனைகள் நித்தியமானவை.” அவைகள் என்றும் நிலைத்து நிற்கும் (ஏசா. 25:1; சங். 33:11).

இன்றைக்கு, தேவ ஜனங்களும்கூட, மனுஷ ஆலோசனைகளை நோக்கி ஓடுகிறார்கள். உலகப்பிரகாரமாய் படித்தவர்கள், பணக்காரர்கள், செல்வந்தர்கள் சொல்லுகிற ஆலோசனைகளைக் கேட்க ஆவலாயிருக்கிறார்கள். ஆனால் மனுஷனுடைய வழிகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகளும், அவருடைய ஆலோசனைகளும், ஆயிரம் ஆயிரமான மடங்கு மேன்மையானவை. மனுஷன் தற்காலத்தை மாத்திரம் அறிவான். ஆனால் வருங்காலமும், நித்தியமும் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. அவரே கடந்த காலத்தையும், வருங்காலத்தையும், நிகழ்காலத்தையும், அறிந்திருக்கிறார். அவரே, சரியாக உங்களுக்கு ஆலோசனை தருகிறவர்.

தேவன் தருவதை, “ஆலோசனையை அருளும் ஆவி” என்று வேதம் சொல்லுகிறது (ஏசா. 11:2). ஆம், அவர்தான் பரிசுத்த ஆவியானவர். அவரை நீங்கள் பெற்றுக்கொண்டு, கர்த்தருடைய சமுகத்திலே அவருடைய வாசற்படியிலே, தேவ ஆலோசனைக்காய் காத்திருக்கும்பொழுது, ஆவியானவர் மூலமாக, உங்களுடைய உள்ளத்தில் ஆலோசனையைத் தந்தருளுகிறார்.

கர்த்தருடைய ஆலோசனைக்காக எதிர்ப்பார்த்திருந்த அப். பவுல் சந்தோஷத்தோடு எழுதுகிறார், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராந்திருக்கிறார். தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்’ (1 கொரி. 2:10,11).

ஏறக்குறைய, இருபது இலட்சத்திற்கும் அதிகமான இஸ்ரவேலரை, கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்து வனாந்தர பாதையிலே, ஆலோசனை சொல்லி வழி நடத்தவும், இளைப்பாறுதலைக் கொடுக்கவும், பரிசுத்த ஆவியானவரை அவர்கள் நடுவில் வைத்தார். உங்களுக்கும் அவ்வாறே ஆலோசனை தரும்படி, அவர் காத்திருக்கிறார். பெற்றுக்கொள்வீர்களா?

நினைவிற்கு:- “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்” (சங். 73:24).