இச்சை என்னும் கண்ணி!

“ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறது போலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது” (நீதி. 7:23).

பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே, ஒரு புத்தியீன வாலிபனைக் கண்டு, அவனைக் கவனித்தேன் (நீதி. 7:7). அங்கு ஒரு வேசி, பணம் சம்பாதிக்கும் படி, வலையை பின்னி, தன்னை அழகுப்படுத்தி, கவர்ச்சி கன்னியாக உட்கார்ந் திருந்தாள்.

ஒரு சிலந்திப் பூச்சி அழகான வலையைப் பின்னி, நடுவிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பூச்சி வந்து விழுந்ததும், தன்னுடைய எட்டு பாசக் கரங்களையும், நேசக்கரங்களையும் நீட்டி, அதை அரவணைக்கிறது போல, “அனுபவி ராஜா அனுபவி” என்று இழுத்து, முடிவிலே இரத்தத்தை உறிஞ்சி குடித்து விட்டு, வெற்று சடலத்தை, பாதாளத்துக்குள் போட்டு விட்டு, போய்விடுகிறது.

“உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே” (நீதி. 6:25). “என் கட்டளைகளையும், என் போதகத்தையும், உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்” (நீதி. 7:2).

“உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்” (நீதி. 7:25-27).

அநேகர், தங்கள் கண்களுக்கு காவல் வைக்காமல், டெலிவிஷன் முன்னால் அமர்ந்து, ஆபாசமான படங்களையும், சீரியல்களையும் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். சாத்தான் அவர்களை கண்களின் இச்சைகளினால், அடிமையாக்கி விட்டான். அநேகர், இன்டர்நெட்டிலுள்ள நிர்வாண காட்சிகளுக்கு அடிமையா னார்கள். அநேகம் விசுவாசிகள் இப்படிப்பட்ட இச்சைகளில் விழுந்து, பரிசுத்தத்தை இழந்து, ஜெபிக்க முடியாமல், மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யராய் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

“இயேசு சொன்னார்: ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்” (மத். 5:28,29).

ஊட்டியில், ஒரு உருளைக்கிழங்கு தோட்டத்தில் வேலை செய்த, ஒரு பெண்மணி சொன்னாள், “ஐயா, நான் இலங்கையில், ஒரு பெரிய எஸ்டேட்டுக்கு சொந்தமான செல்வந்தரின் மனைவியாய், இரண்டு பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக, வாழ்ந்து வந்தேன். இந்தியாவிலிருந்து வந்த ஒரு வாலிபன், என்னோடு நெருங்கி பழகி, ஆசைகாட்டி, தன் இச்சைக்கு உட்படுத்தினான். அவனோடு சுதந்தர பறவையாய், உல்லாசமாய் வாழ இந்தியாவுக்கு வந்தேன். ஒரு இரவு என்னுடைய நகைகளையும், உடமைகளையும், பாஸ்போர்ட்டையும் தந்திரமாய் எடுத்துக் கொண்டு, தலைமறைவாகி விட்டான். நானோ, இப்பொழுது வறுமையிலே வாடுகிறேன்” என்றாள். தேவபிள்ளைகளே, ஞானத்தோடும், இச்சையடக்கத்தோடும் நடந்து கொள்ளுங்கள். தேவனுடைய ஆலயமாக இருக்கிற, உங்களுடைய சரீரத்தை தீட்டுப்படுத்தாதிருங்கள்.

நினைவிற்கு:- “பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்” (நீதி. 20:25).