நேரான பார்வை!

“உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாப் பார்க்கக்கடவது” (நீதி.4:25).

சாலொமோன் ஞானி, “உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது” என்று ஆலோசனை சொல்லுகிறார். உங்களுடைய பார்வை செவ்வையாய் இருக்க வேண்டியது, மிக மிக அவசியம். இயேசுகிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்திலே, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துப்போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்” என்றார் (மத்.5:28,29).

இன்றைக்கு அநேகர், தங்கள் பார்வைகளினாலேயே, அதிகமாக பாவம் செய்கிறார்கள். ஏவாள் விலக்கப்பட்ட கனியை, “இச்சிக்கப்படத்தக்க கனி” என்று பார்த்து, பின்பு அதைப் பறித்து புசித்து, தன் கணவனுக்கும் கொடுத்தாள். கண்களின் இச்சை, மற்றப் பாவங்களையும், சாபங்களையும் கொண்டு வருகிறது. அநேக வாலிபர்கள், “எங்களுடைய கண்களின் இச்சைகளை, எங்களால் தடுக்க முடியவில்லை. ஆபாச படங்களைப் பார்த்து விடுகிறேன். சினிமா வால்போஸ்டர் களிலிருக்கிற, அருவருப்பை பார்த்து, ரசித்து விடுகிறேன்” என்கிறார்கள்.

வேசிகள், வேசிக்கள்ளர்கள், தங்களுடைய கண்களினாலே, மற்றவர்களுக்கு வலைவீசி, கண்ணிகளை வைக்கிறார்கள். ஞானி எச்சரிக்கை செய்து சொல்லு கிறார்; “உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமை களினால் உன்னைப் பிடிக்கவிடாதே. வேசியினிமித்தம், ஒரு அப்பத்துணிக்கை யையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்” (நீதி.6:25,26).

சாதாரணமாக, குதிரைகள் நடக்கும்போது, பல திசைகளில் பார்த்து நடக்கும். அதை செவ்வையாய் நடத்த வேண்டுமென்று விரும்புகிறவர்கள், அதை ஒரே திசையில் நேராக மட்டுமே பார்க்கவேண்டுமென்பதற்காக, குதிரைகளின் கண் களுக்கு கலிக்கம் போடுவார்கள். ‘லவோதிக்கேயா’ சபைக்கு, கர்த்தர், “நீ பார்வை யடையும்படிக்கு, உன் கண்களுக்கு கலிக்கம்போடவும் வேண்டுமென்று, உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” என்றார் (வெளி.3:18).

சிலர் ரோட்டில் நடந்தாலும், அவர்களுடைய ‘கடைக்கண் பார்வை’ எங்கெல்லாமோ போய்க்கொண்டிருக்கும். ஒரு சகோதரன் துக்கத்தோடு சொன்னார், “சகோதரனே, எனக்கு கடைக்கண் பார்வையிருக்கிறது. என் பார்வை ஜவுளி கடையிலே பொம்மைகளை நிறுத்தி செலையைக் கட்டியிருக்கிறார்களே, அதையே பார்க்க விரும்புகிறது” என்றார்.

தேவபிள்ளைகளே, காலையில் எழுந்து ஜெபிக்கும்போது, உங்களுடைய ஒவ்வொரு அவயவங்களையும், கர்த்தருடைய பாதத்தில் சமர்ப்பித்து, பிரதிஷ்டை செய்து, விசுவாசத்தோடு, உங்கள் கண்களுக்காக ஜெபம் செய்யுங்கள். உங்கள் கண்களிலே, இயேசுவின் மனதுருக்கமுள்ள இரத்தமும், வல்லமையுள்ள அபிஷேக தைலமும் இருக்கட்டும். எப்படி, பிள்ளைகளுக்கு கண்களிலே சொட்டு மருந்து விடுவார்களோ, அப்படியே உங்கள் கண்களிலே, இயேசுவின் இரத்தமும், அபிஷேக தைலமும் விழும்படி, அர்ப்பணியுங்கள்.

நினைவிற்கு:- “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக” (நீதி. 4:20,21).