உன் இருதயத்துக்குள்ளே!

“அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத் துக்குள்ளே காத்துக்கொள்” (நீதி. 4:21).

ஒரு பெரிய ராஜாவுக்கு விரோதமாக, யுத்தத்துக்கு வந்த சிற்றரசன், தோல்வி யடைந்தான். பெரிய ராஜா அவனைப் பார்த்து, “உனக்கு மன்னிப்பளித்து, விடுதலை செய்ய விரும்புகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. உன்னுடைய கையிலே, முழுவதும் தண்ணீர் நிறைந்த ஒரு பாத்திரத்தை தருவேன். அதிலே ஒரு சொட்டுத் தண்ணீர் கூட, சிந்திவிடாதபடி நீ நடந்து, இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நிற்கிற, என் கையில் கொடுத்துவிட வேண்டும்” என்றார். அதற்கு சிற்றரசனும் சம்மதித்தான்.

சிற்றரசன் கையிலே, முழுவதுமாய் தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தைக் கொடுத்தார். அவன் பயத்தோடும், நடுக்கத்தோடும், தன்னுடைய இரண்டு கைகளினாலும் அதை உறுதியாப் பிடித்தான். பாத்திரத்திலே உள்ளது தண்ணீராக அவனுக்குத் தெரியவில்லை. அது தன்னுடைய உயிராகவே தெரிந்தது. அவன் நடக்க ஆரம்பித்தபோது, அவன் பின்னால் உருவின பட்டயத்தோடு, இரண்டு பயங்கரமான கொலையாளிகள் நடந்து வந்தார்கள். “ஒரு சொட்டுத் தண்ணீர் கொட்டினாலும், உன்னை வெட்டி கொன்று விடுவோம்” என்றார்கள். மேலும், அவன் நடக்கிற பாதையிலே அவனை பாராட்டும்படி, ஒரு திரள் கூட்டமும், அவனை பழித்து கேலிச் செய்யும்படி, இன்னொரு கூட்டமும் நிறுத்தப் பட்டன.

ஆனால் சிற்றரசனோ, தன்னுடைய முழு கவனத்தையும், அந்தப் பாத்திரத் திலுள்ள தண்ணீரிலே வைத்து, மனஉறுதியோடு நடந்தான். “போற்றுவார் போற்றட்டும்; புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்; என் ஓட்டத்தை வெற்றியோடு முடிக்க வேண்டும்” என்பதே அவனுடைய நோக்கமாயிருந்தது. இரண்டு கிலோ மீட்டர் நடந்து, முடிவிலே ராஜாவின் கையில், பாத்திரத்தை கொடுத்து விட்டு, விடுதலையை பெற்றுக்கொண்டான்!

தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆத்துமாவை, கறைதிரையற்றதாக் காத்துக் கொண்டு, உங்கள் ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்து, பிதாவின் கையிலே ஒப்புவிக்க வேண்டும். இந்த ஓட்டத்தின் முடிவிலே, பிதா மகிமை பொருந்தினவராய் நின்று கொண்டு இருப்பார். அவர் உங்களை தட்டிக் கொடுத்து, “நல்லது, உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று சொல்வார். அப்பொழுது உங்களுடைய தலையிலே, ஜீவகிரீடம், நீதியின் கிரீடம், மகிமையின் கிரீடம் எல்லாம் சூட்டப்படும்.

அநேகர் மரணதருவாயிலே, “ஐயோ, என் இருதயத்தைக் காத்துக்கொள்ள வில்லையே, நான் பரிசுத்தமாகவில்லையே, ஐயோ, இரகசிய பாவங்கள், இரகசிய தொடர்புகள் என்னையும், கர்த்தரை விட்டு வேறுபடுத்தி விட்டதே, கர்த்தருக்குப் பிரியமாயில்லாத பல துரோகங்களை நான் செய்தேனே, என் நித்தியத்தை எங்கே செலவழிக்கப்போகிறேன்?” என்று தவித்து, மரிப்பார்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இரட்சிப்பு சாதாரணமானது அல்ல. தேவகுமாரன் உங்களுக்காக பரலோகத்தைத் துறந்து, கல்வாரிமேட்டிலே அத்தனை பாடுகளையும், வேதனைகளையும் அனுபவித்து, இரத்தம் சிந்தி, ஆத்துமாவை மீட்டிருக்கிறார். ஆகவே, எல்லாக் காவலோடும், உங்களுடைய இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

நினைவிற்கு:- “கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமை யினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்” (2 தெச. 3:3).