ஜீவ வார்த்தைகள்!

“என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு, உன் செவியைச் சாய்” (நீதி. 4:20).

கர்த்தர் தம்முடைய வார்த்தைகளையும், வசனங்களையும், கிருபையாக வேதத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார். எத்தனையோ பக்தர்கள், பல்வேறு மொழிகளிலே, வேதத்தை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சிலர், இந்த வேதப் புத்தகம், நம்முடைய கையிலே கிடைப்பதற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில், வேதத்தை எபிரெயு, கிரேக்க பாஷையிலிருந்து ஆங்கிலத்திலே மொழிபெயர்த்த “திண்டேல்” என்ற பக்தன், இங்கிலாந்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். மதக்குருக்கள்தான் வேதத்தை வைத்திருக்க வேண்டும். சாதாரண மனிதர்கள் வேதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது, அந்த தேசத்து ராணியின் எண்ணம்.

கர்த்தருடைய பெரிதான கிருபையினால், அந்த ராணிக்குப் பிறகு வந்த, “ஜேம்ஸ்” என்ற ராஜா, அவருடைய தலைமையிலே வேதத்தை அச்சிட்டு, சகல ஜனங்களுக்கும் வழங்கும்படி தீர்மானித்தார். இதனால், வேதாகம சங்கங்கள், உலக மெங்கும் உருவாயின. இன்றைக்கு ஆயிரக்கணக்கான மொழிகளிலே வேதாகமம் அச்சிடப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து பல மொழிகளில், மொழிபெயர்ப்பு வேலைகளையும், வேதாகம சங்கங்கள் செய்து வருகின்றன.

வேதப் புத்தகம், பேப்பரில் மையினால், அச்சிடப்பட்டு, மற்றப் புத்தகங்களைப் போல காட்சியளித்தாலும், மற்றப் புத்தகங்களுக்கும், வேதப் புத்தகத்திற்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. வேதப் புத்தகத்தின் ஒவ்வொரு வசனத்திலும், தேவனுடைய ஆவி இருக்கிறது. ஜீவன் இருக்கிறது. ஆகவே அது ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறது. பேதைகளை ஞானியாக்குகிறது. தேனிலும், தெளிதேனிலும் மதுரமாய் இருக்கிறது.

மட்டுமல்ல, வேத வசனங்கள் வல்லமையுள்ளதாயும், அதிகாரம் உள்ளதாயும் இருக்கின்றன. கர்த்தர் பேசின வார்த்தைகள் எவ்வளவு வல்லமையுள்ளவைகள். “இரையாதே அமைதலாயிரு” என்ற ஒரு வார்த்தையினால், கடலும் காற்றும், ‘கப் சிப்’ என்று அடங்கியது. ‘நீ பேசாமல் இவளைவிட்டு போ’ என்று அதட்டிப் பேசின ஒரு வார்த்தை, அசுத்த ஆவியைத் துரத்தினது. ஆகவேதான், நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம், “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வீட்டு வேலைக்காரன் பிழைப்பான்” என்று சொன்னான். அப்படியே, அற்புதத்தைப் பெற்றுக் கொண்டான்.

தேவபிள்ளைகளே, வேத வசனங்களைப் பேசுங்கள். வாக்குத்தத்தங்களைச் சொல்லுங்கள். விசுவாச வார்த்தைகளைக் கூறுங்கள். அப்பொழுது உங்களுடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளும், வல்லமையுள்ளதாக இருக்கும். இயேசு சொன்னார், “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும், என்று மெயாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் (மாற்.11:23).

கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தங்களை உங்களுக்குத் தந்திருக்கிறதினால், மலைகளைக் கண்டு மலைக்காதேயுங்கள். தடைகளைக் கண்டு துவண்டு போகாதேயுங்கள். அவைகளை எதிர்நின்று, விசுவாச வார்த்தைகளைப் பேசுங்கள். இன்று மலைபோல இருக்கிற பிரச்சனைகள், பனிபோல நீங்கிப்போகும்.

நினைவிற்கு:- “இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே” (ரோமர் 10:8).