பிரியமாயிரு!

“ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு” (நீதி. 4:5,6).

ஞானியாகிய சாலொமோன் ராஜா இளம் வயதுடையவராயிருந்தபோது, அவர் உள்ளம் ஆண்டவரோடு இசைந்திருந்தது. கர்த்தருக்கென்று உற்சாகமாய் ஒரு ஆலயத்தைக் கட்டினார். கர்த்தர் அந்த ஆலயத்தில் வாசம் செய்வார், அவருடைய முழு பிரியமும், இஸ்ரவேலரின் மேலிருக்கும் என்று அறிந்துகொண்டார். ஆகவே, “என் தேவனாகிய கர்த்தர் பெரியவர், நான் அவருக்குக் கட்டும் ஆலயமும் பெரிதாயிருக்கும்” என்று சொல்லி கட்டி எழுப்பினார்.

ஆலயப் பிரதிஷ்டையின்போது, ஆயிரமாயிரமான தகனபலிகளை, கர்த்தருக்குச் செலுத்தி, தேவனுடைய இருதயத்தை மகிழ்வித்தார். கர்த்தரும் சாலொமோன் மேல் மிகவும் பிரியமுள்ளவரானார். ஆகவே, தம்முடைய மகிமையின் பிரசன்னத்தோடு, ஆலயத்தில் வந்து இறங்கி, அந்த ஆலயத்தை மகிமையாய் நிரப்பிவிட்டார். மட்டுமல்ல, “இந்த ஸ்தலத்திலே செய்யப்படுகிற ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாய் இருக்கும்” என்று வாக்களித்தார் (2 நாளா. 7:15).

கர்த்தர் சாலொமோனுக்கு அளவற்ற ஞானத்தைக் கொடுத்தார். புத்தியையும், விவேகத்தையும் தந்தார். இதுவரை, உலகத்தில் பிறந்த ஒருவருக்கும் இல்லாத அளவு, விசேஷித்த அறிவு அவருக்கு இருந்தது. ஆகவே அவர் நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களையெல்லாம் எழுதினார். விசேஷமாக இந்த நீதிமொழிகளின் புஸ்தகத்திலே, கர்த்தருக்குப் பிரியமாய் நடந்து கொள்ளுகிற பல இரகசியங்களை, அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

1. “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ, அவருக்குப் பிரியம்” (நீதி. 11:1). வியாபாரிகள், வியாபாரத்தில் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு, கலப்படம் செய்வதையும், கள்ளத் தராசை பயன்படுத்துவதையும், அநியாய விலைக்கு விற்பதையும், நாம் காண்கிறோம். ஆனால் கர்த்தர், யார் மேல் பிரியமாயிருக்கிறார்? சுமுத்திரையான நிறைகல்லை வைத்து, உண்மையாய் வியாபாரம் செய்கிறவர்களின் மேல்தான், அவர் பிரியப்படுகிறார்.

2. “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ, அவருக்குப் பிரியம்” (நீதி. 12:22). “பொய்யர் அனைவரும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுவார்கள்” என்று வெளி. 21:8-ல் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் உண்மையா வாழுகிறவர்கள் மேல், கர்த்தர் பிரியமாயிருக்கிறார்! நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாயிருந்தால், அநேகத்தின் மேல் உங்களை அதிகாரியாக்கி ஆசீர்வதிப்பார்.

3. துன்மார்க்கருடைய பலி, கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ, அவருக்குப் பிரியம்” (நீதி.15:8). தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான். உங்களை தேவ சமுகத்தில் நருங்குண்ட, நொறுங்குண்ட ஜீவபலியாக அர்ப்பணித்து விடும்போது, கர்த்தர் உங்கள்மேல் பிரியமாயிருப்பார். மட்டுமல்ல, உதடுகளின் பலியாகிய ஸ்தோத்திர பலியை, எப்போதும் அவருக்குச் செலுத்துவீர்களாக!

நினைவிற்கு:- “நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்” (நீதி. 16:13).