கிருபையும், தாழ்மையும்!

“இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்” (நீதி. 3:34).

கிருபையும், தாழ்மையும், ஒன்றோடொன்று இணைந்தவை. நீங்கள் கிருபையிலே வளர வேண்டுமென்றால், உங்களுக்கு, “தாழ்மை” மிகவும் அவசியம். கர்த்தர் மனுஷனிடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம், தாழ்மையுள்ள இருதயத்தைத் தான். மனத்தாழ்மையே அல்லாமல், வேறொன்றையும் அவர் மனுஷனிடத்தில் கேட்கிறதில்லை. எந்த மனுஷன் தன்னைத் தாழ்த்துகிறானோ, கர்த்தர் அவனுக்கு கிருபையளித்து, நிச்சயமாகவே உயர்த்தி, உன்னதமான ஸ்தானத்தில் வைப்பார்.

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (யாக். 4:6; 1 பேது. 5:5). ஆற்றிலே தண்ணீர் எங்கிருந்து வருகிறது? அது, எதை நோக்கி ஓடும் தெரியுமா? எங்கே தாழ்வான பகுதி இருக்கிறது என்று பார்த்து, அந்தப் பள்ளத்தை நோக்கித் தான் ஓடும். ஒருநாளும் நதி, மேட்டில் ஏறிப்போவதில்லை. அதுபோலவே, கர்த்தருக்கு முன்பாகவும், விசுவாசிகளுக்கு முன்பாகவும், யார் யார் மிகுந்த தாழ்மையோடு நடந்துக் கொள்ளுகிறார்களோ, அவர்களைத் தான் கிருபையாகிய நதி, வந்து நிரப்பும்.

இயேசுவின் தாயான மரியாளுக்கு, கர்த்தருடைய கண்களில் தயவு கிடைத்ததற்கு காரணம் என்ன? ஆம், மரியாளின் தாழ்மையே அதற்கு காரணம். “அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்: இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொன்னார்கள் (லூக். 1:48). கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அறிவித்த தேவதூதனிடம், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்றார்கள் (லூக். 1:38). தாழ்மையுள்ளவர்களுக்கு, தேவன் கிருபையளிக்கிறார் என்பதற்கு இயேசுவின் தாயார், ஒரு அருமையான சாட்சி.

சுவிசேஷ புத்தகங்களில், இயேசுவின் தாழ்மையை வாசித்து நாம் ஆச்சரியப் பட்டுப் போகிறோம். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:6-8).

ஆகவே, தேவகுமாரனாக இருந்த அவர், தன்னை “மனுஷகுமாரன்” என்று அழைத்துக் கொண்டார். எவ்வளவு தாழ்மையோடுகூட, பெத்லகேம் மாட்டுக் கொட்டகையில் படுத்திருந்தார்! தச்சனாகிய யோசேப்பின் வீட்டில் வாழ்ந்தார். எவ்வளவு தாழ்மையோடு, மீன்பிடி சீஷர்களின் பாதங்களைப் பிடித்துக் கழுவினார். இதனால் அவர் கிருபையின் மேல் கிருபை பெற்றார்.

இன்று கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தம் என்ன தெரியுமா? “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளா. 7:14). ஆகவே, தேவ பிள்ளைகளே, உங்களைத் தாழ்த்தி, தேவ கிருபையிலே வளருங்கள்!

நினைவிற்கு:- “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:3).