செவ்வைப்படுத்துவார்!

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5,6).

கர்த்தர் உங்களுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். கோணலான வைகளைச் செவ்வையாக்குவார். தடைகளையெல்லாம் தகர்க்கும்படி, உங்களுக்கு முன்பாக போவார். ஆனால் நீங்கள் செய்யவேண்டிய ஒரு காரியம் உண்டு. அது என்ன? உங்களுடைய சுயபுத்தியின்மேல் சார்ந்துகொள்ளக் கூடாது.

அன்றைக்கு சாஸ்திரிகளை வழி நடத்திய நட்சத்திரம், அழகாய் அவர்களுக்கு முன்சென்று வழிகாட்டியது. ஆனால் சாஸ்திரிகள், திடீரென்று தங்கள் சுயபுத்தியின் மேல் சார்ந்துவிட்டார்கள். அவர்களுக்கு தோன்றின நட்சத்திரம், ராஜாதி ராஜாவின் நட்சத்திரம் என்பதை அறியாமல், யூதருக்குத்தான் ராஜா பிறந்திருக்கிறார், என்று எண்ணி விட்டார்கள். கிறிஸ்து பூமியனைத்திற்கும் ராஜா (சங். 47:7). அவர் சாந்தகுணமுள்ள ராஜா (மத். 21:4). அவர் பரிசுத்தவான்களின் ராஜா (வெளி. 15:3). அவர் மகிமையின் ராஜா (சங். 24:9).

அடுத்ததாக, அவர்கள் சுயபுத்தியின்மேல் சார்ந்தபடியால், ராஜா அரண்மனையில் எருசலேமிலே பிறப்பார் என்று எண்ணிவிட்டார்கள். ஆகவே தான், ஏரோது ராஜாவினிடத்திலே போய், “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று விசாரித்தார்கள் (மத். 2:2). இதனால் ஏரோது கலங்கி, பொறாமை கொண்டு, பெத்லகேமைச் சுற்றியுள்ள இரண்டு வயதுக்குட்பட்ட, ஆண் குழந்தைகளையெல்லாம் கொலை செய்தான். எத்தனை அழுகுரல் அங்கே எழும்பினது! இதற்கு காரணம், தங்கள் சுயபுத்தியின்மேல், சார்ந்துகொண்ட சாஸ்திரிகளே ஆவார்கள்.

தேவபிள்ளைகளே, உங்கள் சுயபுத்தியின்மேல் ஒருபோதும் சாராமல், உங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்து, உங்கள் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்கள் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

உங்கள் வழிகளைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகள் ஆயிரம் மடங்கு மேன்மையானவை. “மனுஷனுடைய வழி, அவனாலே ஆகிறதல்லவென்றும் நான் அறிவேன்” என்று எரேமியா தீர்க்கதரிசி சொல்லுகிறார் (எரே. 10:23). கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணவில்லையா? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).

“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற, உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது, உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” (ஏசா. 48:17,18).

சாஸ்திரிகளை வழிநடத்த நட்சத்திரங்களைக் கொடுத்தவர், இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த மேக ஸ்தம்பங்களையும், அக்கினி ஸ்தம்பங்களையும் கொடுத்தவர், மோசேயை வழிநடத்த தேவதூதனைக் கொடுத்தவர், உங்களை வழிநடத்த கர்த்தருடைய ஆவியானவரை கொடுத்திருக்கிறார். ஆகவே, ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு, உங்களை முற்றிலும் ஒப்புக்கொடுங்கள்.

நினைவிற்கு:- “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).