பக்தியுள்ள தாய்மார்கள்!

“என் மகனே, உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” (நீதி.1:8).

அநேக பரிசுத்தவான்களின் முன்னேற்றத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் மூல காரணம், அவர்களுடைய பெற்றோர்கள்தான்! தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும் என்பது பழமொழி. பக்தியுள்ள தாய்மார்கள், பிள்ளைகளுக்கு பாலூட்டும் போதும், தொட்டில் ஆட்டும்போதும், பக்தியை ஊட்டிவிடுகிறார்கள். பக்தரின் கதைகளையும், பரிசுத்தவான்களின் அனுபவங்களையும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

ஜாண் வெஸ்லியும், சார்லஸ் வெஸ்லியும் தங்கள் காலங்களில் உலகத்தையே கலக்கினவர்கள். அவர்களுடைய வெற்றியின் இரகசியம், அவர்களுடைய தாயின் ஜெபத்தில் இருந்தது. அந்தத் தாயின் பெயர், சூசன்னாள். பதினேழு பிள்ளைகளையும் வளர்ப்பதும், படிக்க வைப்பதும், உணவு, உடைக்கடுத்த காரியங்களைக் கவனிப்பதும் எத்தனையோ கடினமான வேலையாய் இருந்திருக்கும்.

அவற்றின் மத்தியிலும்கூட, அவர்கள் தன் பிள்ளைகளுக்காக, ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஊக்கமாக ஜெபித்து வந்தார்கள். தன் ஒவ்வொரு பிள்ளைகளையும், தனியாய் அழைத்து, ஆவிக்குரிய விஷயங்களையும், கர்த்தருக்கடுத்த காரியங்களையும், வேத வசனங்களையும் குறித்துப் பேசுவார்கள்.

அந்த தாய், தன் பிள்ளைகளின் வளர்ப்பைக் குறித்து சொன்னார்கள். 1. நான் என் பிள்ளைகளின் ஆத்தும இடத்திற்காக, பிள்ளைகளோடு செர்ந்து முயற்சிக்கிறேன். அவர்களுக்கு சுயகட்டுப்பாடு, தன்னிச்சை அடக்கத்தை தெளிவாக போதிக்கிறேன். 2. என் பிள்ளைகள் பேசத் தொடங்கியதுமே, அவர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்து விடுகிறேன். 3. என் பிள்ளைகள் அழுது அடம்பிடித்துக் கேட்பதைக் கொடாமல், பிள்ளைகளுக்கு நல்லது எதுவோ, அதையே அவர்களுக்குக் கொடுக்கிறேன்.

4. என் பிள்ளைகள் பாவம் செய்யும்போது, அதை திட்டமாய், தீர்மானமாய், நான் கண்டித்து விடுவேன். அதே நேரத்தில், மனஸ்தாபத்தோடு, என்னிடத்தில் அறிக்கையிட்டால், அவர்களுடைய குற்றத்தை மன்னித்து மறப்பேன். 5.எப்போதெல்லாம் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவேண்டிய வேத பாடங்களை ஒப்புவிக்கிறார்களோ, அப்போது அவர்களைப் பாராட்டுவேன். வெகுமதி அளிப்பேன். 6. நான் அவர்களுக்கு எதைக் கொடுப்பதாக வாக்களிக்கிறேனோ, அதை ஏமாற்றாமல், அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன் என்றார்கள்.

மோசேயைக் காப்பாற்றுவதற்காக, அந்த தாயார் எத்தனையாய் பிரயாசப்பட்டாள்! அவளால் வீட்டில் ஒளித்துவைக்கக் கூடாத சூழ்நிலை வந்தபோது, குழந்தையை நாணல்பெட்டியிலே வைத்து, நைல் நதியின் அருகிலே விட்டு, தன் மூத்த மகளை காவல் காக்கச் செய்தாள். மோசேக்கு பால் கொடுக்கும்போதே, இஸ்ரவேலின் தேவனைப் பற்றியும், எபிரெய பாரம்பரியத்தைப் பற்றியும், பக்தி வைராக்கியத்தை கற்றுக்கொடுத்ததினாலே, மோசே பிற்காலத்திலே முழு இஸ்ரவேல் ஜனங்களையும், வழிநடத்திச் செல்வதற்கு, அது ஏதுவாயிற்று அல்லவா!

கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவரே நமக்கு, இனிமையான தாய் தகப்பனைப் போல காணப்படுகிறார். தாயைப்போல நம்மைத் தேற்றுகிறார். “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்” (ஏசா.66:13).

நினைவிற்கு:- “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத் தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்” (சங். 139:13,14).