ஞானத்தின் ஆரம்பம்!

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மூடர் ஞானத்தையும், போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” (நீதி. 1:7).

நான் சிறுவனாயிருக்கும்போது, எங்களுடைய கிராமத்திற்கு பல்வேறு சுவிசேஷகர்கள் வருவார்கள். “எத்தனை பேர் வேதத்தை சுமந்து வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். வேதம் கொண்டு வரவில்லையென்றால், அவர்களுக்கு மிகுந்த கோபம் வரும். “உங்களுக்கு கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இல்லை. வேதத்தை கொண்டு வருவதற்கு வெட்கப்படுகிறீர்கள். நீங்கள் எப்படி ஆசீர்வதிக்கப்பட முடியும்?” என்று சொல்லி, வார்த்தையினாலே, சாட்டையடி கொடுப்பார்கள்.

ஒரு பிரசங்கியார், வேதத்தை ஜனங்கள் தரையிலே வைத்திருந்ததைக்கூட, அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பயபக்தியோடு, மடியில் எடுத்து வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார். வேதம் வாசித்தலுக்கும், வசனங்களை மனப்பாடம் செய்தலுக்கும், எனது பெற்றோர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்றைக்கு அவையெல்லாம் அசட்டைப்பண்ணப் படுகிறது. பிள்ளைகள் தேவ பயத்தோடு வளர்க்கப்படாததினால், பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளுகிறார்கள். கஞ்சா என்றும், மதுபானம், இச்சைகள் என்றும், அடிமைப்பட்டுப் போகிறார்கள்.

நாத்தீக மகா நாடு ஒன்று நடந்தது. கடவுள் இல்லையென்று, பல்வேறு நாத்திகர்கள் எழுதின ஏராளமான புத்தகங்களை மேடையில் அடுக்கி வைத்தார்கள். ஒரு கிறிஸ்தவர் உள்ளே போய், “எல்லாப் புத்தகங்களிலும் தலைச்சிறந்த புத்தகம், மேலான புத்தகம், இந்த வேதப் புத்தகமே” என்று சொல்லி, மற்றப் புத்தகங்களுக்கு மேலாக வேதத்தை வைத்தார். இதைக் கண்டு கோபப்பட்ட ஒரு நாத்தீகர், வேதப் புத்தகத்தை எல்லாப் புத்தகங்களுக்கும் கீழாக, அடியிலே வைத்தார். கிறிஸ்தவர் அதைக் கண்டு சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து, “வேதம் மேலானது” மட்டுமல்ல, எல்லாப் புத்தகங்களுக்கும் ஆதாரமானது. அடித்தளமானது. அஸ்திபாரமானது என்பதை நிரூபிக்கிற விதத்தில் செய்துவிட்டார்” என்று சொன்னார்.

இன்னும் அதிக எரிச்சலடைந்த அந்த நாத்தீகர், வேதத்தை எடுத்து மற்ற புத்தகங்களின் நடுவிலே, வைத்தார். அப்பொழுது அந்த தேவ மனிதர், “இதோ, வேத புத்தகம் நடுவிலே அச்சாணியைப்போல வைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றிதான் உலகமே இயங்குகிறது. ஓடுகிற ஒரு வண்டிக்கு, அச்சாணி எப்படியிருக்கிறதோ, அப்படியே உலக ஓட்டத்திற்கு, வேதம் முக்கியமானது என்று, அந்த நண்பர் மறைமுகமாக சொல்லி விட்டார்” என்றார்.

ஒருவன் ஞானத்தைப் பெற, முதலாவது கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் மிக அவசியம். பயத்தை பலவிதங்களாகப் பிரிக்கலாம். மனுஷருக்குப் பயப்படுகிற பயம், அரசாங்கத்துக்குப் பயப்படுகிற பயம், பிசாசுக்குப் பயப்படுகிற பயம், இன்னும் எத்தனையோ வகை பயங்கள் உண்டு. “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” (நீதி. 29:25). ஆனால் தேவனுக்குப் பயப்படுகிற பயமோ, ஞானத்தைக் கொண்டு வரும்.

ஒரு இளம் போதகர், பிரசங்க மேடையிலே ஏறிவிட்டார். ஜனங்களைப் பற்றிய பயம், ஒரு திகில் அவரை வாட்டியது. அதைக் கண்ட ஒரு முதியவர், ஒரு சிறு பேப்பரில், “பயப்படாதிருங்கள். கர்த்தருக்கென்று தைரியமாக பிரசங்கியுங்கள்” என்று எழுதி அனுப்பினார். அதை வாசித்தவுடன், அந்த இளம் ஊழியர் திடன் கொண்டார். எழுந்து நின்று, வல்லமையாய் பிரசங்கித்தார்.

நினைவிற்கு:- “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான். அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும்” (சங். 112:7,8).