புதைபொருளான புதையல்!

“ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்து கொள்வான்” (நீதி. 1:6).

இரண்டாம் உலக மகா யுத்தத்தில், ஜெர்மனி தேசம் தோற்று, அமெரிக்கர்களின் கையிலும், ரஷ்யர்களின் கையிலும் விழுந்தபோது, ரஷ்யர்கள் அங்குள்ள பொன்னையும், வெள்ளியையும், விலையேறப்பெற்ற பொருள்களையும் கொள்ளையடித்தார்கள். ஆனால், அமெரிக்கர்களோ, ஜெர்மனியிலுள்ள அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் கண்டுபிடித்து, அவர்களின் ஞானத்தை, பெரிய பொக்கிஷமாக கண்டு, தங்கள் தேசத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தானியேல் தீர்க்கதரிசிக்கு, உலகப்பிரகாரமான பொக்கிஷங்கள் பெரிதாகத் தோன்றவில்லை. ராஜாவாகிய பெல்ஷாத்சார் தானியேலிடம், “நீ இரத்தாம்பரமும், கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்று சொன்னபோது, தானியேல் ராஜ சமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்” (தானி. 5:16,17) என்றார்.

தானியேலுக்கு பொக்கிஷமானது, மறைபொருள்களை வெளிப்படுத்தும் தேவ கிருபையேயாகும். “ஞானத்துக்கும், புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில், ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்” (தானி. 1:20). கர்த்தர் தானியேலை, சகல தரிசனங்களையும், சோப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார் (தானி. 1:17).

தானியேலும்கூட, உபவாசித்து, ஜெபித்து, அநேக தேவ இரகசியங்களை அறிந்துகொண்டார். தானியேலுக்குள் புதைபொருள்களை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெளிவிக்கவும் அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியு முண்டென்று காணப்பட்டது (தானி. 5:16,14).தேவபிள்ளைகளே, நீங்கள் ஆவியின் வரங்கள்மேல் பசிதாகமாயிருக்கும்போது, புதையல்களைத் தேடுவதைப் போல தேடும்போது, அவைகளைக் கர்த்தர் உங்களுக்கும் தந்தருள்வார். அந்தப் புதை பொருள்களை நீங்கள் வெளிப்படுத்தும்போது, ஜனங்கள் ஆச்சரியப்படுவார்கள். கர்த்தரண்டை வருவார்கள்.

தானியேலின் மரணநேரம் வந்தபோது, கர்த்தர் அன்போடு, “தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராவார்கள்; அறிவும் பெருகிப்போம் என்றார்” (தானி. 12:4). “தானியேலே போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதை பொருளாக வைக்கப்பட்டும், முத்திரிக்கப்பட்டும் இருக்கும்”(தானி 12:9).

நீங்கள் தானியேல் புத்தகத்தையும், வெளிப்படுத்தின விசேஷத்தையும் இணைத்து, தியானித்து, கருத்தோடு படிப்பீர்களென்றால், வருங்காலத்தைப் பற்றிய புதைபொருள்களை அறிந்துகொள்வீர்கள். நரகத்தைப் பற்றியும், பரலோகத்தைப் பற்றியுமுள்ள, தேவ இரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். தேவபிள்ளைகளைப் பற்றியும், சாத்தானின் பிள்ளைகளைப் பற்றியும், இந்த உலகத்தின் முடிவைப் பற்றியும் அறிந்துகொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- “நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்” (தானி. 12:13).