ஆசீர்வதிப்பார்!

“என் தேவன், தம்முடைய ஐசுவரியத்தின்படி, உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19).

தேவ ஜனங்கள் குறைவோடும், தேவைகளோடும் இருப்பதைக் கண்ட அப்.பவுல், அவர்களுக்கு ஆசீர்வாதத்தின் வழியைக் காண்பிக்க சித்தங் கொண்டார். அதனால் அவர் அன்போடு, “என் தேவன் ஐசுவரியமுள்ளவர், செல்வந்தர்; அவர் உங்களுடைய குறைவுகளையும், தேவைகளையும் அறிந்திருக்கிறார். அவர் தம்முடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்கி, ஆசீர்வதிப்பார்!” என்று எழுதுகிறார்.

நீங்கள் கிறிஸ்துவண்டை வரும்போது, பாவங்கள் நீங்கி, இரட்சிப்பின் சந்தோஷம் வருகிறது. சாபங்கள் நீங்கி, ஆசீர்வாதம் வருகிறது. வியாதிகள் நீங்கி, ஆரோக்கியம் வருகிறது. அதோடுகூட தேவனுடைய ஆசீர்வாதங்கள் நின்று விடுகிறதா? இல்லை. உங்களுடைய பொருளாதார நிலைமையையும் கர்த்தர் சந்தித்து, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்க ஆவலுள்ளவராய் இருக்கிறார். “என் தேவன்” என்று மார்தட்டுகிற அப்.பவுல், “உங்கள் குறைவுகளையெல்லாம் நிவர்த்தியாக்குவார்” என்று உறுதி கூறுகிறார்.

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும், மிகவும் அதிகமாய் ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவர் (எபேசி. 3:20). நாம் நினைக்கிற, அல்லது எதிர் பார்க்கிற செல்வங்களின் அளவு, மிகவும் குறைவுதான். ஆனால் கிறிஸ்துவின் பட்சத்தில் இருக்கும் செல்வமோ, வார்த்தைகளால் அளவிட முடியாதது. வெள்ளியும், பொன்னும், சகல மிருகஜீவன்களும், அவருடையதல்லவா? அவர் தம்முடைய மகிமையான ஐசுவரியத்தையெல்லாம், தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுப்பதிலே, மிகுந்த மகிழ்ச்சியுடையவராய் இருக்கிறார்.

கானாவூர் கல்யாண வீட்டிலே, குறைவு ஏற்பட்டபோது, அங்கிருந்த எல்லாப் பாத்திரங்களிலும் பெரிய பாத்திரமாக, ஆறு கற்சாடிகளை அவர் கண்டார். திராட்சரசத்தை பொதுவாக, சிறு சிறு துருத்திகளிலே ஊற்றி வைத்திருப்பார்கள். ஆனால் கிறிஸ்துவோ, அங்கிருந்த எல்லா பெரிய கற்சாடிகளும் நிரம்பி வழியும்படி, ரசத்தை கொடுக்க விரும்பினார். வேலைக்காரர்கள், அந்த கற்சாடிகளின் விளிம்பு வரையிலும், தண்ணீரை நிரப்பினார்கள் என்கிறது, ஆங்கில வேதாகமம்.

தாவீது ராஜா ஆனந்த பரவசத்தோடு சொல்லுகிறார்: “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” ஆம், கர்த்தர் பாத்திரத்தில் கால் பாகம், அரை பாகம், முக்கால் பாகம் என்று நிரப்புகிறவர் அல்ல. முழுவதையும் நிரப்புகிறவர், நிரம்பி வழிய, வழிய ஊற்றிக்கொண்டே இருக்கிறார்.

அந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆம், “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38). இந்த வசனம் கர்த்தரின் ஆவிக்குரிய ஆசீர்வாத இரகசியம் அடங்கிய பகுதியாகும். நீங்கள் கர்த்தருக்கென்று கொடுக்கிறது குறைவாக இருந்தாலும், அவர் உங்களுக்காக கொடுப்பது நிரம்பி வழிகிற அளவுக்கு மிக அதிகமாய் இருக்கும்.

நினைவிற்கு:- “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கி. 3:10).