அடைக்கலமானவர்!

“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).

இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கானான் தேசத்திற்குள் வந்தபோது, கர்த்தர் அங்கே அடைக்கலப் பட்டணங்களைக் கட்டும்படி சொன்னார் (எண். 35:9-28). இஸ்ரவேல் ஜனங்களில் யாராவது தவறியோ, அல்லது எதிர்பாராமலோ, இன்னொருவரை கொன்றுவிட்டால், அவன் தப்பி பிழைத்து அந்த அடைக்கலப் பட்டணத்திற்கு ஓடிப்போ, ஒளிந்து கொள்வான். இல்லாவிட்டால் இறந்தவனின் குடும்பத்திலுள்ளவர்கள், அவனைத் துரத்திப் பிடித்து, பழிக்குப் பழிவாங்கி கொன்று விடுவார்கள்.

இன்றைக்கும்கூட லாரி ஓட்டுகிற ஒருவன், தவறி ஒரு குழந்தையின் மேல் ஏற்றி விட்டால், அவன் உடனே லாரியை அப்படியே நிறுத்திப் போட்டுவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடிப்போய், அடைக்கலம் புகுந்து கொள்கிறான். இல்லாவிட்டால், அந்த ஊர் ஜனங்கள், அவனைப் பிடித்துக் கொன்று விடுவார்கள். தும்பு தும்பாய், கிழித்து விடுவார்கள்.

தாவீது, கர்த்தரிலே ஒரு அடைக்கலத்தைப் பார்த்தார். பாவங்களும், சாபங்களும், குற்ற மனச்சாட்சிகளும், பிசாசுகளும் துரத்தும்போது, கர்த்தருக்குள் ஓடிப்போய் சுகமாய் இருப்பது, எத்தனை பெரிய பாக்கியம்! “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக் கலமுமாயிருக்கிறார்” (சங். 18:2). என்றெழுதுகிறார். சாலொமோன் ஞானியும் கூட, கர்த்தருடைய அடைக்கலத்தை அறிந்து, “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதி. 18:10) என்று எழுதுகிறார்.

ஒருமுறை, ஒரு ஊரிலே பயங்கரமான புயல் வீசிக்கொண்டிருந்தது. சுழல் காற்றும், பெருங்காற்றும், புயல்காற்றும் ஒன்றாய் இணைந்து, மரங்களை வேரோடு பிடுங்குவதும், வீட்டு கூரைகளையெல்லாம் ஆகாயத்தில் பறக்கடிப்பதுமாய் பெரிய சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. ஒருவன் அதைக் கண்டு, தனது பாதுகாப்பான வீட்டிலிருந்து வெளியே வந்தான். காற்று வீசும்போது, கொண்டு வருகிற மணலையும், பறக்கிற புழுதியையும், செடி, கொடிகளின் இலைகளையும் பார்த்துக் கொண்டேயிருந்தான். திடீரென்று ஒரு மரத்தின் கிளை ஒடிந்து, சுழல் காற்றில் சுழற்றப்பட்டு, சரியாய் அவனுடைய தலையில் வந்து, அடித்தது. பாவம், அவன் வீதியிலே, பரிதாபமாய் மரித்தான்.

தாவீது சொல்லுகிறார், “உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும், உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (சங். 57:1). ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார், “உம்மை உறுதியாப் பற்றிக்கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).

தேவபிள்ளைகளே, உங்களுக்கு மேன்மையான அடைக்கலம், கல்வாரிச் சிலுவை. கிறிஸ்துவினுடைய காயங்களே, உங்களுக்கு மறைவிடம். கன்மலையின் வெடிப்பைப்போல, அவருடைய சரீரம் பிளவுண்டு இருக்கிறது. கன்மலையின் வெடிப்பிலே தங்குகிற புறாவைப்போல, அவரிலே மறைந்து கொள்வீர்களாக!

நினைவிற்கு:- “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால், அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங். 91:14).