தேவதூதர்கள்!

“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” (சங். 91:11).

நம்முடைய குடும்பம் பெரியது! நம் குடும்பத்தில், பெரிய தேவதூதர்கள் உண்டு. கேருபீன்கள், சேராபீன்கள் உண்டு. அவர்கள் பணிவிடை ஆவிகளாய், உங்களுக்கு உதவி செய்யும்படி, காத்திருக்கிறார்கள். உங்களுக்காக யுத்தம் செய்யும்படி நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சகோதரி, தரிசனத்திலே அவர்கள் வீட்டில் ஏராளம் தேவதூதர்கள் இருப்பதையும், அவர்கள் எல்லோரும் சோம்பலாய் உட்கார்ந்து இருப்பதையும் கண்டார்களாம். அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்று விரும்பி, முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, இந்த தேவதூதர்கள் எங்கள் வீட்டைச் சுற்றிலும் பாளயமிறங்கி, எங்களைப் பாதுகாக்கும்படி ஜெபிக்கிறேன்” என்று கேட்டுக் கொண்டாள். அவ்வளவுதான், உடனே சோம்பலாயிருந்த அவ்வளவு தேவதூதர்களும், சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டைச் சூழ காவல் புரிந்தார்கள்.

“இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு, அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” (எபி. 1:14). போதகர் ரிச்சர்ட் உம்பிராண்ட் நம்மைப் பார்த்து கேட்கிறார், “உங்கள் வீட்டிலே வேலைக்காரியை, சோபாவில் உட்கார்ந்து டி.வி. பார்க்கும்படி விட்டுவிட்டு, நீங்கள் போய், சமையல் செய்ய கஷ்டப்படுவீர்களா? இல்லை. நீங்கள் வேலைக்காரியை விரட்டி வேலை வாங்குவீர்கள். கர்த்தர், தேவதூதர்களை பணிவிடை ஆவிகளாய் கொடுத்திருக்க, நீங்கள் அவர்களை பயன்படுத்திக்கொள்ளாமல் இருந்தால், உங்களுக்குத்தான் நஷ்டம்.

ஒருமுறை, போதகர். ரிச்சர்ட் உம்பிராண்ட் அவர் பூமிக்கு கீழே, முப்பது அடி ஆழத்திற்குள்ளே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தேவதூதர்களை வரவழைத்து, அவர்களுக்கு பிரசங்கம் செய்து, அந்த பிரசங்கத்தை அவர்கள் போய், தனது விசுவாசிகளிடத்தில் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வாரமும் அவ்விதமான பிரசங்கங்களை, விசுவாசிகளுக்கு தேவதூதர்கள் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தார். மட்டுமல்ல, பதினான்கு ஆண்டுகள் கழித்து, அவர் விடுதலை செய்யப்பட்டபோது, முன்பு அவர் பிரசங்கித்த பிரசங்கங்கள் அனைத்தையும், அவர் தேவதூதர்கள் மூலமாக கேட்டறிந்து, புத்தகங்களாக வெளியிட்டார்.

தேவபிள்ளைகளே, தேவதூதர்கள் உங்களுடைய பக்கம் இருக்கிறார்கள். அன்று எசேக்கியா ராஜா, அசீரியருக்குப் பயந்து, அவர்களை எதிர்க்க திராணியில்லாமல் தவித்தபோது, கர்த்தர், ஒரேயொரு தேவதூதனை அனுப்பினார். அவன் எழுந்து, அசீரியரின் பாளையத்திற்குள் புகுந்து, ஒரு லட்சத்து எண்பத்தையாயிரம் பேரை சங்கரித்துப் போட்டான்.

பேதுரு சிறை வைக்கப்பட்டிருந்தபோது, சிறைச்சாலையின் கதவுகளை தேவ தூதர்கள் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து, நீங்கள் தேவாலயத்திலே போய் ஜீவ வார்த்தைகளை சொல்லுங்கள் என்றான் (அப். 5:19,20). பவுலும் சீலாவும் சிறைச்சாலையிலே பாடி கர்த்தரை துதித்தபோது “சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக, பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுப் போயிற்று” (அப். 16:26).

நினைவிற்கு:- “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:7).